தமிழ்நாட்டில் வேலை தமிழனுக்கே! முழக்கம் எல்லாம் சரி! வேலை பார்க்க ரெடியா?

தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான வட இந்தியர் நுழைந்து வேலை செய்துவருகிறார்கள். பெரும்பாலோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காக குடும்பம் குட்டிகளை விட்டு வந்திருக்கிறார்கள். அந்த வேலைகளை செய்துவந்த தமிழர்கள் நிம்மதியாக வீட்டில் சும்மா இருக்கிறார்கள்.


மேலும் தமிழர்கள் இப்போது சொகுசாக மாறிவிட்டார்கள், படிக்கத் திணறுகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்த இரண்டு தேர்வுகளே சாட்சி. ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு தமிழர்கள் எண்ணிக்கை சட்டென குறைந்துவிட்டது. மாவட்ட நீதிபதி தேர்வில் ஒருவர்கூட தேறவில்லை. அந்த லட்சணத்தில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அதனால் கஷ்டப்பட்டு படிக்கும் வட இந்தியன், தமிழர்கள் பார்க்கும் வேலைகளை சுட்டுவிடுகிறார்கள். இனியும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது என்றுதான் பெ.மணியரசன் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.  மத்திய அரசின் ரயில்வே துறை உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்டே மறுக்கப்பட்டு, வட நாட்டினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என்ற முன் முழக்கத்தோடு இன்று திருச்சி பொன் மலை திருச்சி ரயில்வே தொழிற்சாலை முன் தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம் நடத்தினார் பெ.மணியரசன். 

“ தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் 18 துறைகளிலும் இந்திக்காரர்களையும், மற்ற வெளி மாநிலத்தவர்களையும் 90% என்ற அளவில் பணியமர்த்தி வருகின்றனர். இனப் பாகுபாடு காட்டி தமிழர்களை தங்கள் சொந்த மாநிலத்தில் கூட தகுதியிருந்தும் பணியில் அமர்த்தாமல் புறக்கணிக்கின்றனர் . இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் கையைப் பிடித்து வெளீயே இழுத்துவருவோம் என்று தெரிவித்துள்ளார்.

அட, தமிழன் ஒழுங்கா படிச்சா... ஒழுங்கா வேலை செஞ்சா எதுக்கு அடுத்தவன் நுழையப் போகிறான் என்ற கேள்விக்கு மட்டும் மணியரசனிடம் பதிலைக் காணோம்.