ஜூவியிடம் ரூ.100 கோடி கேட்டு ஸ்டாலின் வழக்கு! காரணம் அந்த டிவி சேனல்?

யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜூனியர் விகடன் பத்திரிகை மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்க்கு வழக்குப் போடுவதாக அறிவித்து இருக்கிறார். தி.மு.க.வின் பி டீம் என்றுதான் வர்ணிக்கப்படும் ஜூனியர் விகடன் மீது வழக்கா என்று தி.மு.க.வினரே அதிர்ந்து நிற்கிறார்கள்.


ஏனென்றால், தேர்தல் கணிப்பின்போது தி.மு.க.வுக்கு சீட்களை ஒட்டுமொத்த இடங்களையும் அள்ளிக் கொடுத்தது. அது மட்டுமின்றி, மே 23க்குப் பிறகு தி.மு.க. ஆட்சி அமைக்கப்போகிறது என்றும் உறுதிபட எழுதியிருந்தது. டெல்லியை மருமகன் சபரீசன் கன்ட்ரோல் செய்கிறார் என்றும் தமிழகத்தை உதயநிதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் கட்சி விவகாரங்களை விலாவாரியாக எழுதியது.

அப்போதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், திடீரென லாட்டரி மார்ட்டின் விவகாரத்தில் தி.மு.க. சிக்குகிறது என்று எழுதியதும் பதறிப்போய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லி, கேஸ் போட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பகீர் தகவல்கள் வெளியே வருகின்றன.

மார்ட்டின் விவகாரத்துக்காக தி.மு.க. தலைமை கோபமாகவில்லையாம். போகிறபோக்கில் சபரீசன் மற்றும் உதயநிதியை இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டதைத்தான் தி.மு.க. ரசிக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கும்படி ஒரு சேனல் முதலாளிதான் சொல்லியிருக்கிறார் என்று நம்புகிறது தி.மு.க. ஏனென்றால், மார்ட்டின் விவகாரம் நடந்து ஒரு வாரம் கழித்துத்தான் அந்த செய்தியை அட்டைக்கே கொண்டுவந்திருக்கிறது ஜூனியர் விகடன்.

சேனல் முதலாளியை திருப்தி படுத்துவதற்காகவே இந்த செய்தியை அட்டையில் போட்டு அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறார்கள். அதனாலே கேஸ் போட்டு கோபத்தைக் காட்டுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும், இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் தி.மு.க.வினரே சொல்கிறார்கள். ஏனென்றால், நீரடிச்சி நீர் விலகவா போகிறது என்றும் சொல்கிறார்கள். அட, போங்கப்பா.