தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்தவர், முஸ்லீம் என்றால் இட ஒதுக்கீடு கிடையாதா? என்ன சட்டம் இது?

தாழ்த்தப்பட்ட இனத்தை ஒட்டுமொத்தமாக ஏழைகளாக, வாய்ப்புகள் கிடைக்காதவர்களாக மட்டுமே பார்க்கவேண்டும் என்ற குரல் உரக்க எழும்பிவருகிறது.


ஏனென்றால், தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என்றால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு பயன் கிடைக்காது எறு சொல்லப்படுகிறது. இதுகுறித்து திருமாவளவன் உரக்க குரல் எழுப்பியிருக்கிறார். இது அவரது அறிக்கை. இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்சி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956 ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது.

அடுத்து 1990 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பௌத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட மத்திய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங்களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும்கூட தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.

சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறித்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காட்டப்படவேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம் என்று கூறியிருக்கிறார்.