வீட்டு கேட்டில் மின்சாரம்! லேசாக தொட்டதால் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி! கோவையில் துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!

துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.


கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமைடை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கடந்த 15ம் தேதி காலமானார். பழனிசாமிக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள் சிலர் இரவு நேரம் ஆகிவிட்டதால் வீட்டிலேயே தங்கிவிட்டனர். இரவு நேரத்தில் வெளிச்சம் தேவை என்பதற்காக வீட்டு வாசலில் இருந்த இரும்புக் கேட்டில் ஒரு டியுப்லைட் கட்டப்பட்டு எரிய விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார் துர்க்கையம்மாள் என்பவர். அப்போது இரும்பு கேட்டை திறக்க கை வைத்தபோது அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த ரவிக்குமார் என்பவரும் இரும்பு கேட்டை தொட்டதால் அவரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். 2 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை உறுதிபடுத்திய உறவினர்கள் மின்இணைப்பை துண்டித்தனர். ஏற்கனவே ஒரு துக்க சம்பவம் நடைபெற்ற வீட்டில் மேலும் பேரன் மற்றும் உறவுப்பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உறவினர்கள் கதறி அழுத்தனர். தகவல் அறிந்து வந்த தடாகம் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.