ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆப்பு வருமா..? நீதிமன்றத்தில் விசாரணை

தொலைக்காட்சியைத் திறந்தாலே ஆன்லைன் சூதாட்டம் பற்றித்தான் விளம்பரங்கள் ஓடுகின்றன. இதில் ஈடுபட்டு பொருள் இழந்தவர்கள் நாடு முழுவதும் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


.இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 10 பேர் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஆன்லைன் சீட்டு விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு வழக்கறிஞர் நீலமேகம் முறையிட்டார். 

இதையடுத்து முகமது ரஃபி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'ஆன்லைன் சீட்டு விளையாட்டில் அப்பாவி பொதுமக்கள் பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.அண்மையில் கோவையில் ஒருவரும் புதுவையில் ஒருவரும் ஆன்லைன் ரம்மியில் தோற்று தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைகளை தடுக்க ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும்,' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரும் மனு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை வழங்கவேண்டும் என்பதுதான் மக்கள் கோரிக்கை.