’ஞானகுரு’ எஸ்.கே.முருகன் அறிமுகம்

கையெழுத்துப் பத்திரிகை முதல் மின்னிதழ் வரை


பத்திரிகை உலகில் 35 ஆண்டு கால அனுபவமும் 50க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியிருக்கும் எஸ்.கே.முருகன், தற்போது மனவள ஆலோசகராக செயல்படுகிறார். ஞானகுரு பதிப்பகம் மூலம் மக்களிடம் மகிழ்ச்சியைப் பரப்பும் வகையில் மாத மின்னிதழ்கள் வெளியிட்டு வருகிறார்.

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி

தென் தமிழகமான விருதுநகரில் கூலித் தொழிலாளிகளான கந்தசாமி – பெரியாயி தம்பதியருக்கு 6வது மகனாக 1964ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி பிறந்தார். விருதுநகர் முத்துராமன்பட்டியில் கட்டப்பட்டிருந்த கே.வி.எஸ். பள்ளியை பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைக்க வந்த நேரத்தில், அவசரமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால், ஜூன் 15ம் தேதி பிறந்ததாக கணக்கு காட்டப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டார். உண்மையான பிறந்த தேதியை குறித்து வைக்கும் அளவுக்கு இவரது பெற்றோர் விழிப்புணர்வுடன் இல்லை.

விருதுநகரில் கே.வி.எஸ். நிறுவன பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்தார். +2 கணக்குப்பதிவியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியதுடன் நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்பவராக இருந்தார்.

விருதுநகர் வி.ஹெச்.என்.எஸ்.என். கல்லூரியில் இளங்கலை பி.காம். படிப்பு முடித்தார். இவரது குடும்பத்தில் இளங்கலை படிப்பு முடித்த முதல் பட்டதாரி என்பது தவிர படிப்பில் வேறு எந்த சாதனையும் படைக்கவில்லை. எம்.காம். ஆர்வத்தில் தொலைதூரப் படிப்பில் சேர்ந்தாலும் அதனை முடிக்கவில்லை.

எழுத்து ஆர்வம்

காமிக்ஸ் மீதான ரசிப்பைத் தொடர்ந்து நூலகத்தில் ஓய்வு நேரத்தைக் கழித்தார். பள்ளியில், ‘மலர்க்கணைகள்’ எனும் மாணவர்கள் படைப்புத் தொகுப்பை வெளியிட்டார். கல்லூரி படிக்கும் நேரத்தில் பகுதி நேரமாக ராஜன் டைப்ரைடிங் நிலையத்தில் பணியாற்றி வந்த நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து, ‘வசந்தம்’ என்ற தமிழ் டைப்ரைட்டிங் மாத இதழ் நடத்தினார். அந்த காலத்தில் டைப்ரைட்டிங் இதழ் என்பது பேசுபொருளாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது தாய், இதயம் பேசுகிறது, ராணி போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

குடும்பம்

கல்லூரி படிப்பு முடித்ததும் சொக்கர் பாலிபேக்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1987ம் ஆண்டு ஜோதியுடன் திருமணம் நடந்தது. நிர்மல் என்ற மகன், நிலா என்ற மகளும் இருக்கிறார்கள்.

பத்திரிகை பணி

விருதுநகரில் உடன் படித்த நண்பர் முத்துராமலிங்கம் மதுரையில் நக்கீரன் இதழ் தொடங்கப்பட்ட நேரத்தில் நிருபராகவும் மதுரை விநியோகஸ்தராகவும் இருந்தார். அந்த பணியில் நண்பர்களுடன் இணைந்து, பின்னர் நக்கீரன் மதுரை நிருபராகப் பணியாற்றினார். நக்கீரன் பிரசுரத்திலிருந்து தொடங்கப்பட்ட இனிய உதயம் இதழில் ஜாலியான படைப்புகள் எழுதினார்.

இதையடுத்து முத்துராமலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளியான சத்ரியன், நெற்றிக்கண், சினிமா டுடே பத்திரிகைகளில் பணியாற்றினார்.

பின்னர் சென்னை தினகரன் பத்திரிகையில் சேர்ந்து கோவை மாலைமுரசுக்காக ஆருடம், ஆரோக்கியா, கதைமுரசு போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார். தினகரன் நாழிதழுடன் இலவச இணைப்பாக வெளியான வசந்தம், அருள் ஆகிய இதழ்களுக்கும் பலன், வாசுகி இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்தார். சினிமா ஆசிரியராக தினகரன் நாழிதழில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றியதுடன், ’மெடிமிக்ஸ் தினகரன் சினிமா விருதுகள் விழா’வை 12 ஆண்டுகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.

தினகரன் நாளிதழை கே.பி.கே.குமரன் விற்பனை செய்தபிறகு ஆனந்தவிகடன் குழுமத்தில் இணைந்து ஜூனியர் விகடன் தலைமை இணை ஆசிரியராகப் பணியாற்றினார். விகடன் தீபாவளி மலருக்கு ஆறு ஆண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

இதையடுத்து குமுதம் குழுமத்தில் இணைந்து, குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

காட்சி ஊடகம்

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை, ‘கறுப்பு ரோஜா’ என்ற 16 வார ஆவணத் தொடராக பொதிகைத் தொலைக்காட்சிக்காக எழுதி, இயக்கியுள்ளார். புதுயுகம் தொலைக்காட்சியின் கதை இலாகாவில் நிர்வாகத் தயாரிப்பாளராக சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

எழுத்தாளர்

ஆனந்தவிகடன் இதழில் எழுதிய, ‘மந்திரச்சொல்’ தொடர் இவருக்கு மிகுந்த புகழ் பெற்றுத் தந்தது. ஆனந்தவிகடன் பிரசுரத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களில் இன்று வரை மந்திரச்சொல் முக்கிய இடத்தில் உள்ளது. இதையடுத்து ஜூனியர் விகடன் இதழில் எழுதிய, ‘ஞானகுரு’ இவரை ஒரு தன்னம்பிக்கை எழுத்தாளராக அடையாளம் காட்டின.

தன்னம்பிக்கைக் கட்டுரைகள், சிறுகதை தொகுப்பு, நாவல், இதிகாசக் கதைகள் என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களில் வெளியிடப்பட்டுள்ள இவரது குறிப்பிட்ட சில நூல்களின் பட்டியல்

1. மந்திரச்சொல்

2. தலையணை மந்திரம்

3. வெற்றிதரும் மந்திரம்

4. லவ்வாலஜி

5. பெருந்தலைவர் காமராஜர்

6. ஞானகுரு

7. ஒற்றை மார்பு

8. நிம்மதி தரும் மந்திரம்

9. வாழ்வைப் புரட்டும் மந்திரம்

10. கடவுளின் நிறம் வெள்ளை

11. ஆத்மலோகம்

12. சினிமா எனும் வாழ்க்கை

13. எளிய தமிழில் சித்தர் தத்துவம்

14. வீடு உங்கள் கையில்

15. கடவுளின் குரல்

16. நெற்றிக்கண் திறக்கட்டும்

17. பணம் தரும் மந்திரம்

18. பெண்மையே வெல்லும்

19. ஆழ் மனமே தாழ் திறவாய்

20. என்னுயிர்த் தோழி

21. இன்று முதல் ஹேப்பி

22. நெருப்பூ – அம்பையின் கதை

23. ஆழ் மனமே தாழ் திறவாய்

24. நீ பாதி நான் பாதி

25. பணமாக மாறுங்கள்

26. என்ன செய்தார் சைதை துரைசாமி

27. பொற்காலம் 2011 – 2016

28. ஞானகுரு பதில்கள்

மருத்துவப் புத்தகங்கள்

ஞானகுரு பதிப்பகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அரசு கிருத்திகாவுடன் இணைந்து நிறைய மருத்துவர்களின் படைப்புகளை தமிழில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

டாக்டர் ஜெயம் கண்ணன் - குழந்தைப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், மருத்துவ சவால், திருமந்திரத்தில் மருத்துவம், தாய்மை, வாடகைத் தாய், மதர்குட் (ஆங்கிலம்).

டாக்டர் பழனிவேலு - வயிற்றுப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி, உடல் பருமன் – சந்தேகங்கள் தீர்வுகள், வயிறு நோய்கள்.

டாக்டர் பதூர் மொய்தீன் - படிக்கத் திணறும் குழந்தைகள், வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம்.

டாக்டர் சந்திரலேகா - உங்களுக்கும் ஒரு குழந்தை, யு டூ கேன் பிகம் பிரக்னென்ட் (ஆங்கிலம்), தாய்மை மகத்துவம், 24 கர்ப்பிணிகளின் பிரசவ அனுபவம்.

டாக்டர் குணசீலன் - வாயும் புற்றுநோயும், பூச்சிக்காடு டூ புது டெல்லி பி.பி.ராஜன் வெற்றி சரிதம்.

டாக்டர் மாலா ராஜ் - பெண்ணின் வாழ்க்கை பயணம்.

டாக்டர் மோகன் பிரசாத் - கல்லீரல் எனும் காவலன், நீங்களும் எடை குறைக்கலாம்.

ஞானகுரு

தற்போது மனவள ஆலோசகராக செயல்படுவதுடன் ஞானகுரு பதிப்பகத்தின் மூலம் மகிழ்ச்சி, யாக்கை, தமிழ் லீடர் ஆகிய மின்னிதழ்கள் நடத்திவருகிறார்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஆரோக்கியமான உடல், நிம்மதியான மனம், போதுமான பணம் ஆகியவற்றுடன் அன்பு செலுத்தும் உறவுகள் அமைவதற்கு வழி காட்டும் வகையில், ஞானகுரு என்று நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார். ஒவ்வொரு மனிதரும் ஞானகுருவாக மாற வேண்டும் என்பதே இவரது ஆசை.

தன்னுடைய எழுத்து ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காக நிறைய எழுதி வரும் எஸ்.கே.முருகனுக்குப் பிடித்த மந்திரச் சொல், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.