உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தை! ரியல் எஸ்டேட் பங்குகள் மளமள உயர்வு!

வியாழக்கிழமை இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 40,653 புள்ளிகளில் முடிவடைந்தது.


இன்ட்ரா டேயில் சென்செக்ஸ் 40,682 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. மேலும் நிஃப்டி 0.40% அதிகரித்து 12,012 புள்ளிகளில் முடிவடைந்தது, கடந்த ஜூன் மாதத்திற்கு முதல் முறையாக இன்ட்ரா டேயில் 12,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகியுள்ளது தேசிய பங்குச் சந்தை நிஃப்டி.

கடந்த பல காலாண்டுகளாக தொடரும் மந்தநிலை நிலையை கருத்தில் கொண்டு நலிவடைந்த பொருளாதாரத்தை உயர்த்த. நிதி அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட்டை துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

அதன்படி. ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சியால். பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான திட்டங்களை தொடங்க கடந்த புதன்கிழமை ₹ 25,000 கோடி நிதியை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதனால் ரியல் எஸ்டேட் மற்றும் அதனுடன் தொடர்புடைய வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு கடன் கொடுத்துள்ள NBFC களுக்கும் பயனளிக்கும் வகையில், இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி ரியால்டி கிட்டத்தட்ட 1% உயர்ந்தது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சோபா லிமிடெட் மற்றும் பிரெஸ்டீஜ் எஸ்டேட் புராஜெக்ட், பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகள் முறையே 2% முதல் 5% வரை உயர்ந்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீட்டு எண் 0.7 சதவிகிதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.54 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் சில்லறை வர்த்தகம் 35% விற்பனை அதிகரித்துள்ளது காரணமாக சன் பார்மா நிறுவனம் ரூ .1,064 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்ட்ரீ, தற்போது பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ .135 கோடியாக உள்ளதாகவும் கடந்த ஆண்டின் லாபத்தை விட 35 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் காலாண்டு அடிப்படையில், இதன் லாபம் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ .92.70 கோடியிலிருந்து 45.63 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இந்நிலையில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (CFO) பிரதீப் குமார் மேனன் ராஜினாமா செய்துள்ளார். நவம்பர் 15 வரை அவர் பணியில் இருப்பார் என தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்த நிதியாண்டில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 57 கிளைகளை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1,580 ஏடிஎம்களுடன் மொத்தம் 402 கிளைகள் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கியின் அறிக்கை ஒன்று.

மணியன் கலியமூர்த்தி