வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை..! காற்று வாங்கப் போன ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஐதராபாத்: மொட்டை மாடியில் படுத்து கிடந்த சிறுத்தையால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் .


ஐதராபாத் புறநகர்ப்பகுதியான ஷாத்நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள மண்ணி விஜய் குமார் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று சாதாரணமாக படுத்து உறங்கியுள்ளது. இரவு முடிந்து, பகல் வந்ததும் சூரிய வெப்பம் தாங்காமல் மொட்டை மாடியை விட்டு கீழே இறங்கிய சிறுத்தை படிக்கட்டுகளின் அடியில் தங்கியுள்ளது.

இதனை பார்த்த அண்டை வீட்டினர் பீதியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி, சிறுத்தையை உயிருடன் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

''குளிர்காலம் என்பதால் வீட்டின் உள்ளேயே படுத்து கிடந்தோம், இதுவே வெயில் காலமாக இருந்திருந்தால் மொட்டை மாடியில் இருந்த சிறுத்தையிடம் சிக்கியிருப்போம்,'' என சிறுத்தை படுத்திருந்த வீட்டின் உரிமையாளர் அச்சத்துடன் கூறினார்.