சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்ட மனைவிக்கு கோவில் கட்டிய கணவன்! தாம்பரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் தாய்க்கு அடுத்தபடியாக மனைவியை தெய்வமாக நேசிக்கும் ஒருவர் அவருக்கு கோயில் கட்டி தரிசித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரியும் ரவி தாம்பரம் அடுத்த எருமையூரில் வசித்து வருகிறார். இவருக்கும் ரேணுகா என்பவருக்கும் 32 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 2006ம் ஆண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்ட ரேணுகா சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இவர்களுக்கு விஜய், சதீஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். 

மனைவி ரேணுகா பிரிந்ததை தாங்கிக் கொள்ள முடியாத ரவி அவரது நினைவிலேயே வாழ்ந்து வருகிறார். மேலும் சொந்த வீடு கட்ட வேண்டும் என மனைவி ரேணுகா ஆசைப்பட்டதாகவும் ஆனால் அவர் வாழ்ந்த போது அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை எனவும் ரவி வேதனை தெரிவித்தார்.

அதனால் தற்போது 9க்கு 9 அடி அகலத்தில் 13 அடி உயரத்தில் மனைவி ரேணுகாவுக்கென ஒரு கோயில் கட்டியுள்ளார் ரவி. அதில் பளிங்கு கல்லில் அவரது மனைவி ரேணுகாவின் சிலை அமைத்து உள்ளார். அந்த சிலையை ரவியும் அவரது மகன்களும் நாள்தோறும் வழிபட்டு வருகின்றனர். அந்த கோயிலுக்கு ரேணுகா அம்மன் எனவும் பெயர் வைத்துள்ளார் ரவி.

திருமணம் ஆன ஒரு வாரத்திலும், ஒரு மாதத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் தம்பதிகள் வாழும் உலகில் ரவி - ரேணுகா தம்பதியின் வாழ்க்கைமுறை ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.