கடைசி சுற்று வரை திக் திக்! சிதம்பரத்தில் திருமா ஜெயித்தது எப்படி?

ஐபிஎல் போட்டிகளில் போல் கடைசி சுற்று வரை திக் திக் என பரபரப்பாக இருந்த சிதம்பரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை திருமாவளவனுக்கு வெற்றியை தேடிக் கொடுத்து முடிந்தது.


சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவின் சந்திரசேகர் போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரேசகர் முன்னிலையில் இருந்தார்.

ஒவ்வொரு சுற்றிலும் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வாக்குகள் வரை அதிமுக வேட்பாளர் தான் முன்னிலையில் இருந்தார். ஆனால் 11வது சுற்றில் திடீர் திருப்பமாக திருமாவளவன் முன்னிலை பெற்றார். ஆனால் முன்னிலை விவரம் வெறும் 750 வாக்குகளாக மட்டுமே இருந்தன. அடுத்தடுத்த சுற்றுகளில் மிக சொற்ப வாக்கு எண்ணிக்கையில் திருமா முன்னிலையில் இருந்தார்.

ஆனால் 17வது சுற்றுக்கு பிறகு மீண்டும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இப்போது வாக்கு வித்தியாசம் சில நூறுகளாக குறைந்தது. தொடர்ந்து மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த காரணத்தினால் சிதம்பரத்தில் திருமா தோல்வி உறுதி என்று தகவல் வெளியானது.

இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. 20வது சுற்றை எண்ணி முடித்த போது யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் திருமா முன்னிலை பெற்றார். இந்த முறை அவர் சுமார் 2 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றார். இருந்தாலும் அதிமுக வேட்பாளர் திருமாவளவனை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தார்.

கடைசியில் 5 லட்சத்து 229 வாக்குகள் பெற்று திருமாவளவன் வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்று 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இதற்கு காரணம் திருமாவளவன் பெற்ற தபால் ஓட்டுகள் தான். அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகள் தான் திருமாவை வெற்றி பெறச் செய்தது.

மேலும் கடைசி சில சுற்றுகளில் அரியலூரில் திருமாவளவனின் சொந்த கிராமம் உள்ளிட்ட பகுதிகள் ஒட்டு மொத்தமாக அவருக்கு ஆதரவாக வாக்களித்தன. இதனால் வறும் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவால் வெல்ல முடிந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் அரியலூரில் சொந்த ஊர் கைகொடுக்கவில்லை என்றால் திருமா தோல்வி அடைந்திருப்பார்.