திரும்பிய பக்கம் எல்லாம் போராட்டம்! தீயாய் பரவும் வன்முறை! கொந்தளிக்கும் ஹாங்காங்! என்ன தான் நடக்கிறது அங்கு?

1104 சதுர கிலோமீட்டர் பரந்து விரிந்த வணிகப் பிரதேசம் ஹாங்காங் நகரம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன், ஹாங்காங் உலகின் அதிக மனிதர்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்றாகும்.


1984ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி 50 ஆண்டுகால ஒப்பந்தங்களின் படி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு தேசம். இரு அமைப்புகள் என்கிற சிறப்பு நிர்வாக பிராந்தியமாக இந்த தீவுக்கு தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து போல.

2034 வரை அந்த சிறப்பு அதிகாரம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டதை மீறி சீன அரசு ஹாங்காங் மாகாண உள் விவகாரங்களில் தலையிட. பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.  

இடைநிறுத்தப்பட்ட ஒப்படைப்பு மசோதாவை முழுமையாக திரும்பப் பெறுதல். ஹாங்காங் காவல் துறைக்கு தனி அதிகாரமுள்ள அமைப்பை உருவாக்குதல். ஆர்ப்பாட்டங்களை "கலவரங்கள்" என்று வகைப்படுத்துவதை நிறுத்துதல். இந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஹாங்காங் மாகாண தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் எனவும்.

அங்கு மீண்டும் சட்டமன்றத்தின் தேர்தலை அனுமதிக்க அரசியல் சீர்திருத்தத்தை சுதந்திரமாக தொடங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த சனிக்கிழமை அன்று கலவரத்தில் முடிந்துள்ளது

.இந்த கலவரத்தில் இதுவரை 4 பேர் பலியானதாகவும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் வேண்டி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடந்த போராட்டம் தான் மிகவும் பெரியது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஒப்படைப்பு மசோதா நிறுத்தப்பட்டுவிட்டதாக ஹாங்காங் மாகாண தலைவர் கேரி லாம் கூறியிருந்தார். ஆனால் ஒப்படைப்பு மசோதா செயலிழந்துவிட்டது என்பது அரசியல் விளக்கமே தவிர. சட்டப்பூர்வமாக அது நிரூபிக்கப்படவில்லை” என அம்மாகாண குடிமக்கள் கட்சியின் வழக்கறிஞர் ஆல்வின் யியுங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கொலை , பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் அல்லது காவல் துறை சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா, தைவான், மக்காவில் உள்ள அதிகாரிகள். அந்த குற்றவாளிகளை ஒப்படைக்க கோரிக்கை வைத்தால், ஹாங்காங் நிர்வாகம் அவர்களை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹாங்காங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லாம் முன்மொழிந்துள்ள சட்டதிருத்தம் இது.

இந்த சட்டவரைமுறைகளை எதிர்த்து தான் இந்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் சீன அரசாங்கமோ, இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாது. ஹாங்காங் சீனாவுக்கு சொந்தமானது எனவும். சீனாவின் சட்டம் இந்த மாகாணத்திற்கும் பொருந்தும் என கூறி வருகிறது, ஆனால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து தனிப்பட்டு விளங்குகிறது.

அதற்கென சொந்த நாணயம், தனி அரசியல் அமைப்பு மற்றும் கலாச்சார அடையாளகளை கொண்டுள்ளது .ஹாங்காங்கில் வசிப்பவர்கள் தங்களை சீனர்களாக பார்க்கவில்லை, மாறாக ஹாங்காங்கர்களாகவே பார்க்கிறார்கள் என்கிறது அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை.

இந்நிலையில் கிழக்கு கவுலூனில் உள்ள க்வூன் டோங் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் கலவரக்காரர்களால் ஏற்பட்ட மோதல்கள், பதட்டமானதாக மாறி கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் லத்தியால் அடித்தும் விரட்டப்பட்டனர். சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்ததும் போல.இநத போராட்டமும் கலவரத்தில் முடிந்துள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீன அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் முழுவதும் சீன பிராந்தியத்தில் தங்களது ஜனநாயகம் நிலைகொண்டுள்ள வேண்டி ஹாங்காங் நகரம் முழுவதும் மனித சங்கிலிகளை உருவாக்கி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு அருகில் இருந்த விமான நிலையத்தில் புகுந்த அவர்கள் தங்களுடைய போராட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் ஹாங்காங் விமான நிலையம் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகளும் சீன அரசின் உயர் அதிகாரிகளும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பு கூட இதற்கு சரியான முடிவு எட்டாத பட்சத்தில். மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

சீனாவில் கடந்த 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கோரி இதேபோல் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சீன பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக மாபெரும் போராட்டம் ஏற்பட்டது.

தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன் மென் சதுக்கத்தில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம், ஜூன் மாதம் வரை நீடித்தது.

அப்போதைய சீன அரசு இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க நினைத்தது. அதன் விளைவாக ஜூன் மாதம் 4-ந்தேதி தியானன்மென் சதுக்கத்தில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பின்னர் குருவியை சுடுவது போல் போராட்டக்காரர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தினர். சீன ராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலையில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தியானன்மென் சம்பவம் இன்றும் சீன மக்களின் மனதில் ஆறாத வடுவாகவே பதிந்துள்ளது.

இந்த நிலையில் தான் ஹாங்காங் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் போராட்டம் தியானன்மென் படுகொலை போன்ற மீண்டும் ஒரு சம்பவத்துக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கின் எல்லை பகுதியில் சீனா ராணுவ படைகளை குவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கு சர்வதேச அளவில் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

மணியன் கலியமூர்த்தி.