துத்தி இலைகளால் பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் பெறலாம்!

முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் பல நோய்க்கு ஆளாகுறாங்க.


“கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்... இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.”

பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்த அந்த நபருக்கு துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கும்படி ஆலோசனை வழங்க, துத்தியின் மற்ற குறிப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. செவிக்கு உணவு தேடும் என் ஆவலைப் புரிந்துகொண்ட பாட்டி, தொடர்ந்து பகிர்ந்தாள் துத்தி பற்றி!

“துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.”

பாட்டி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தபோது, அதிக உடல் சூட்டுப் பிரச்சனையைப் பற்றி ஒரு நபர் பாட்டியிடம் முறையிட்டார். ஒரு டப்பாவில் பொடி செய்து போட்டிருந்த துத்தி விதைப் பொடியை கொஞ்சம் பொட்டலம் போட்டு அவருக்குத் தந்து, அதனை சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வரச் சொல்லி அனுப்பினாள்.