மீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றுபவர்! பீகாரில் இருந்து தூக்கு கயிறு! 4 பேருக்கும் ஒரே நேரத்தில் மரணம்! தயாராகும் திகார் சிறை!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தூக்கில் ஏற்ற பீகாரில் இருந்து தூக்கு கயிறுகளும், மீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றும் நபரும் வரவழைக்கப்பட உள்ளனர்.


நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் தாக்கூர் சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரை வரும் ஜனவரி 22ந் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தூக்கில் ஏற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறையில் இருக்கும் நான்கு பேரும் தனித்தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பேரும் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வாரத்தில் ஒரு நாள் குடும்ப உறுப்பினர்களில் ஒரே ஒருவர் நான்கு பேரையும் பார்க்க அனுமதி வழங்கப்படும். பிறகு ஜனவரி 22ந் தேதி காலை 7 மணிக்கு நான்கு பேரும் ஒரே நேரத்தில் தூக்கில் ஏற்றப்பட உள்ளனர்.

இதற்காக திகாரில் சிறை எண் 3ல் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. நான்கு பேரையும் தூக்கில் போட பீகாரின் பக்சார் சிறையில் இருந்து தூக்கு கயிறு டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளன. இதே போல் திகார் சிறையில் தூக்கில் ஏற்றும் நபர் கிடையாது. இதனால் உத்தரபிரதேசத்தில் மீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றும் நபர் டெல்லி அழைத்து வரப்படுகிறார். 

நீதிமன்றம் மரண சாசனம் பிறப்பித்த மறுநிமிடமே நான்கு பேரையும் தூக்கில் ஏற்றுவதற்கான பணிகள் திகார் சிறையில் தொடங்கியுள்ளது. மேலும் இனி நான்கு பேருக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்க எந்த வாய்ப்பும் இல்லை.