கும்பலால் கொடூரமாக பலாத்காரம்! 17 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த ரூ‌50 லட்சம்!

டெல்லி: குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரூ.50 லட்சம் தரும்படி, அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரமும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் பலரது கண்ணீர் கதையும் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விசயங்களாகும். அப்படிப்பட்ட ஒரு பெண்தான், இந்த செய்தியில் குறிப்பிடப்படும் நபர். அகமதாபாத் அருகே உள்ள ராந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் யாக்கூப் ரசூல் பனோ  என்ற பெண்தான் அவர்.

2002 கலவரத்தின்போது, இந்த பெண் முஸ்லீம் என்பதால், இவரை ஒரு கும்பல் கூட்டாக, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதவிர, பில்கிஸ் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை அந்த வன்முறை கும்பல் கொன்றுவிட்டது.

இதன்பேரில், அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நாடினார். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அந்த நீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், ''கர்ப்பிணி என்றும் பாராமல் பில்கிஸ் பனோவை பாலியல் வன்முறை செய்துள்ளனர்.

மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தும் உள்ளது. பில்கினிஸ் சந்தித்த துயரங்களை நம்மால் தாங்க முடியாது. என்ன செய்தாலும் அதற்கு நம்மால் ஈடுகட்ட முடியாது. எனினும், அவருக்கு உரிய நஷ்ட ஈடு எதையாவது பெற்று தர வேண்டியது நமது கடமையாகும். இதன்படி, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படி குஜராத் மாநில அரசுக்கு, இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது,'' என்று கூறப்பட்டுள்ளது.