கிரகப்பிரவேசத்தை துக்க வீடாக மாற்றிய கொடூர விபத்து! நெல்லையில் அரசுப் பேருந்துடன் கார் மோதி இருவர் பலி!

நெல்லை மாவட்டத்தில் காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சுபநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.


நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்திலும், கொஞ்சம் வங்கிக் கடனும் பெற்று தனது நீண்டநாள் கனவான வீடு ஒன்றை கட்டியுள்ளார். பல்வேறு இன்னல்களுக்கு இடையே கட்டி முடித்த வீட்டில் குடியேற முடிவு செய்து அந்த வீட்டிற்கு கிரக பிரவேசம் செய்ய முடிவெடுத்து உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடைபெறவிருந்த கிரக பிரவேச சுப நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை நகரத்திற்கு சென்று வாங்கி வர அதிகாலையிலேயே காரில் புறப்பட்டு சென்றார். காரில் அவரது நெருங்கிய நண்பரான நேகவியாவும் சென்றுள்ளார். அப்போது ஈரோட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது சோமசுந்தரம் சென்ற கார் எதிர்பாராத விதமாக அந்த பேருந்து மீது மோதியது. விபத்தில் கார் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியது. காரில் பயணம் செயத் சோமசுந்தரம், நேகவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுபநிகழ்ச்சிக்காக சோமசுந்தரம் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அவரது மரணச் செய்தி கேட்டு துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. சோமசுந்தரத்தை ஒரு நாளாவது தன் மடியில் படுக்க வேண்டும் என்று வேதனையோடு காத்திருக்கிறது அவர் ஆசை ஆசையாய் கட்டிய வீடு. அவரது பூத உடலை எதிர்பார்த்து….