டெல்லி விரைந்த ஆளுநர்! தலைமைச் செயலகத்தில் முதல்வர்! என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசரமாக டெல்லி சென்ற நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகம் வந்திருந்தார்.


கடந்த திங்களன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகம் வருவதாக இருந்தது. ஆனால் தலைமைச் செயலகம் வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டார். அன்றைய தினம் கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்து தனது வீட்டில் வைத்து நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். அன்று மாலை அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவிலும் எடப்பாடி பங்கேற்கவில்லை.

அதன் பிறகு கடந்த வியாழக்கிழமை அன்றுதான் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார் எடப்பாடி. தொடர்ந்து  வெள்ளியன்று பால திறப்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி ஞாயிற்றுக்கிழமை வரை சேலத்திலேயே இருந்துவிட்டார். இந்த நிலையில் இன்று காலை திடீரென ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக சென்னை திரும்பி தலைமைச் செயலகம் சென்றார்.

ஒரு வாரமாக தலைமைச் செயலகம் பக்கமே எட்டிப் பார்க்காத எடப்பாடி பழனிசாமி ஆளுநர் டெல்லி சென்றதும் அங்கு வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து விசாரித்தபோது தான் டெல்லி தொடர்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 10 நாட்களாக துண்டிக்கப் பட்டு விட்டதாகவும் இதனால் அப்செட்டில் இருந்த அவர் டெல்லி தொடர்புகளை புதுப்பிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் ஆளுநர் டெல்லி சென்று இருப்பதால் அங்குள்ள நிலவரங்களை அறிவதற்கு எடப்பாடி அவசர அவசரமாக தலைமைச் செயலகம் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆளுநர் தமிழகம் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து எடப்பாடி பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள். எது எப்படியோ அதிமுகவின் கோட்டை தலைமை என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் டெல்லி மேலிடத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆளுநரின் டெல்லி பயணம் ஆகியவை தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.