அரசியலை விட்டே விலகுகிறேன்! தமிழிசையிடம் ஸ்டாலின் ஆவேசம்!

சந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்தித்துப் பேசிய விவகாரம் டெல்லி வரையிலும் பெரும் களேபரத்தைக் கிளப்பிவிட்டது. இந்த விவகாரத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்த நேரத்தில் அமைச்சர் ஜெயகுமாரும், தமிழிசை சௌந்தர்ராஜனும் பா.ஜ.க.வில் ஸ்டாலின் துண்டு போட்டு வைத்திருக்கிறார் என்று அதிர வைத்தனர்.


இதுகுறித்து மீண்டும் பேசிய ஜெயகுமார், ‘நான் சொன்னதற்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்கவே இல்லை, அப்படியென்றால் நான் சொன்னது உண்மை என்றாகிறது. மௌனம் சம்மதத்திற்கு அடையாளம்’ என்று ஸ்டாலினை மீண்டும் கடுப்பேற்றினார். இந்த நிலையில்தான், ‘நான் பா.ஜ.க.விடம் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் நான் அரசியலைவிட்டே விலகுகிறேன். தமிழிசை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போனாரே’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார். அது மட்டுமின்றி, ‘நான் பா.ஜ.க.வுடன் பேசவில்லை என்று தெரியவந்தால் தமிழிசை பதவி விலக வேண்டும்‘ என்றும் கோபமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி கூட்டணியில் உள்ள அனைவருக்கும் விளக்கம் அளிக்கவேண்டிய இக்கட்டில் மாட்டியிருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் இன்று சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்துப் பேசி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேபோன்று டெல்லியில் இருக்கும் சபரீசனிடம், ராகுல் காந்திக்கு விளக்கம் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரில் சந்தித்து, சும்மாதான் சந்திரசேகர ராவை சந்திதோம். நாங்கள் எப்போதும் காங்கிரஸ் பக்கம்தான் என்று உறுதி கொடுக்குமாறு சொல்லியிருக்கிறாராம். 

இவர்கள் மட்டுமின்றி இப்போது ஸ்டாலினை கூட்டணிக் கட்சியினர்களும் சந்தேகமாகப் பார்க்கிறார்களாம். டெல்லி காங்கிரஸை சரிக்கட்டியதும் தமிழக காங்கிரஸ் கட்சியை சரிக்கட்டவும், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுக்கும் விளக்கம் அளிக்க ஆட்களை அனுப்புகிறாராம் ஸ்டாலின். வேலியிலே போற ஓணாணை என்று ஏதோ சொல்வார்கள்...