2வது கல்யாணம் பண்ணிக்கமாட்டியா? பெற்ற தந்தையால் 21 வயது ரிஸ்வானா பானுவுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்! மதுரை அதிர்ச்சி!

கணவரை பிரிந்து வாழும் மகள், மறுமணம் செய்ய சம்மதிக்காததால் அவர் தந்தையால் கொல்லப்பட்ட கொடூரம் மதுரையில் நடைபெற்றுள்ளது.


மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் முகமது இஸ்மாயில் என்பவர் புதுமண்டபத்தில் தையல் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் இஸ்மாயில் ஆடு இறைச்சி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். மூத்த மகள் 21 வயதான ரிஸ்வானா பானுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து வந்த ரிஸ்வானா பானு கடந்த 2 ஆண்டுகளாக தந்தையின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதற்கிடையே கணவரிடம் இருந்து முறையான விவகாரத்தும் பெற்றுவிட்டார். தனக்கு பின்னர் மகள் எப்படி தனிமையில் வாழ்வாரோ என எண்ணிய தந்தை, மகளுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

ஆனால் இந்த மறுமணத்தில் ரிஸ்வானா பானுவுக்கு விருப்பமில்லை என தெரிகிறது. இதையடுத்து மகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தந்தை வற்புறுத்த அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று மகன் கல்லூரிக்கு சென்றவுடன் ரிஸ்வானா பானுவிடம் மறுமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் மறுக்கவே ஆத்திரத்தில் ஆடு வெட்டுவதற்கு பயன்படுத்தி வந்த கத்தியை எடுத்து வந்து மகளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரிஸ்வானா பானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் இஸ்மாயில் தலைமறைவானார். அதன் பின்னர் அவரை தல்லாகுளம் பகுதியில் கைது செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.