பிரபல இசைக்கலைஞர் சாக்சபோன் கத்ரி கோபால்நாத் திடீர் மரணம்! ஏஆர் ரகுமானுடன் பணியாற்றியவர்!

பத்மஸ்ரீ விருது பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.


புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கத்ரி கோபால்நாத்தை பற்றி தெரியாத இசைக் கலைஞர்களே கிடையாது. டூயட் டத்திற்காக அவர் சாக்சபோன் வாசித்தபோது அடித்தட்டு மக்களுக்கும் அவர் யார் என்று தெரியும் அளவிற்கு பிரபலம் ஆனார். 

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த நாமஸ்வர கலைஞரின் மகன் கத்ரி கோபால்நாத். வெளிநாட்டு இசைக்குழு சாக்ஸபோனை வாசித்தபோது தானும் ஒரு சாக்ஸபோன் இசைக் கலைஞராக ஆசைப்பட்டார் கோபால்நாத். பின்னர் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபால கிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்ஸபோன் வாசிப்பைக் கற்றார்.

சென்னையில் மிருதங்க இசைக் கலைஞர் டி. வி.கோபாலகிருஷ்ணனிடம் முழு பயிற்சியை பெற்ற கோபால்நாத் உலகம் முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கலிபோர்னியாவின் இசைக் கலைஞரான ஜாஸ், கோபால்நாத் இணைந்து செய்த இசைக் கச்சேரி கோபால்நாத்தின் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘டூயட்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றினார் கத்ரி கோபால்நாத். டூயட் படம் தமிழக ரசிகர்களுக்கு கத்ரி கோபால்நாத்தை அறிமுகம் செய்து பெரிய பெருமை தேடித் தந்தது.

கர்நாடக கலாஸ்ரீ, பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி போன்ற பல்வேறு விருதுகளைக் குவித்த கத்ரி கோபால்நாதுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகாந்த் கத்ரி, இசையமைப்பாளர், மற்றொரு மகன் குவைத்தில் பணிபுரிகிறார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்ரி கோபால்நாத் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். கோபால்நாத்தின் மறைவுக்கு இசை உலகம் உட்பட மொத்த இந்திய திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.