போலி சித்த மருத்துவர்..! கொரோனா மருந்து..! திருத்தணிகாசலங்கள் ஏன் உருவாகிறார்கள்?

திருத்தணிகாசலங்கள் ஏன் உருவாகிறார்கள்?


என்ன செய்து கொண்டிருக்கின்றனர் பட்டப் படிப்பு படித்த எட்டாயிரம் சித்த மருத்துவர்கள் ? உலக நாடுகளின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகளை உள்வாங்கிக் கட்டமைக்கப்பட்ட மருத்துவ முறைதான் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவம்.

இதை அலோபதி மருத்துவர்களே மறுக்க மாட்டார்கள். பல நாடுகளின் மரபு மருத்துவங்களை அலோபதி உள்வாங்கிக் கொண்ட நிலையில் அந்த நாட்டு மரபு மருத்துவ முறைகள் பல முற்றிலுமாகத் தனித்தன்மையை இழந்துவிட்டன.

அந்த வகையில் இந்தியாவின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகள் என்ற பட்டியலில் இருப்பவை சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி . உடன், Naturopathy எனும் இயற்கை மருத்துவ முறைகளும் உள்ளன. இவை, தங்கள் தனித்தன்மைகளை அலோபதிக்குக் காவு கொடுக்காமல் இன்னமும் இருக்கின்றன.

ஜெர்மானியர்கள் உருவாக்கியதே ஓமியோபதி அல்லது ஹோமியோபதி . இயற்கையின் விதியின் அடித்தளமான “விருப்பத்தை விருப்பம்மூலம் குணப்படுத்துதல்”எனும் தத்துவத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது. 

நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அரேபியர்கள் உருவாக்கியது யுனானி . ஆயுள் வேதம் எனும் தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஆயுர் வேதம். ஆயுள் நீட்டிக்கும் வேதம் என்பது இதன் பொருள். ஓமியோபதி மற்றும் யுனானியை ஒப்பிடும் போது ஆயுள் வேதத்தில், 

சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு

சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்

காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்

பூதவித்யை- மன நலம் பேணுதல்

குமார பிரியா- குழந்தை வளர்ப்பு

அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்

இரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான 

மருந்துகளைப் பயன்படுத்துதல்

வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம் 

ஆகிய முறைகள் உள்ளன. 

சோதிடமும், ஆயுள் வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம் என்கிறது குறிப்புகள் .

ஆனால் இந்த 3 முறைகளிலும் உள்ள அதற்கும் மேற்பட்ட முழுமையான முறைகளைக் கொண்டது மட்டுமல்லாமல் இவைகளுக்கெல்லாம் தாத்தனுக்கும் கொள்ளுத் தாத்தனாகத் திகழ்வது சித்த மருத்துவம்.

ஆயுர் வேதத்தின் கூறுகளை மீண்டும் தமிழ்ப் படுத்தினால் இதன் மீது சித்த மருத்துவத்தின் உள்ளடக்கம், தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பது எளிதில் விளங்கும்.

உலகின் எல்லா மருத்துவ முறைகளோடும் ஒப்பிடும்போதும், மேற்கண்ட மருத்துவ முறைகளோடு ஒப்பிடும் போதும் சாகாக்கலை வரை மிகப் பெரும் முழுமைத்தன்மை கொண்டதாக சித்த மருத்துவம் உள்ளது.

ஆனால் இந்த முழுமையான தன்மைகளைச் செயல் முறைப்படுத்தும் முயற்சி, பயிற்சி, அனுபவம் பெற்றவர்கள் லட்சங்களில் சிலர்தான் உள்ளனர்.

பல அம்சங்கள் Theory அடிப்படையிலேயே கிடைக்கின்றன. பல சித்தர் பாடல்களின் மருத்துவக் குறிப்புகளை முழுமையாக Decoding செய்யும் அறிவார்ந்தவர்களும் மிக மிக அரிதான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

சித்தர்களின் Chemistry எனப்படும் வேதியியல், Alchemy எனப்படும் இரசவாதம் ஆகியவற்றின் விரிவான , முழுமையான அறிவியல் இதுவரை உலகில் வேறு எந்த மருத்துவ முறைகளிலும் காணக் கிடைக்கவில்லை.

பழனியில் உள்ள போகர் உருவாக்கிய ஒன்பது வெவ்வேறு எதிர் எதிரான இரசாயனக் கலவை கொண்ட சிலை இதுவரை உலகில் எந்த இனத்திலும், மருத்துவத்தாலும் கட்டமைக்கப்பட்டதாக குறிப்புகூட இல்லை.

அந்த வகையில் எந்த வகையிலும் முழுமையாக, அலோபதியுடன் ஒன்றிணைந்தோ, அலோபதியால் உள்வாங்கப்பட்டோ ஒரு போதும் செயல்பட முடியாத, அலோபதிக்கு நேர் எதிரான பக்க விளைவுகளற்ற தனிச் சிறந்த மருத்துவ முறை சித்த மருத்துவ முறை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவ முறைக்குச் சொந்தக்கார்கள் தமிழர்கள், சொந்த நாடு தமிழ்நாடு. ஆனால் இங்கே 1956 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சித்த மருத்துவக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று மருத்துவர்களாக ஆனவர்களின் எண்ணிக்கை வெறும் எட்டாயிரம் பேர் மட்டுமே.

ஆனால் ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஆங்கில அலோபதி மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS பட்டப்படிப்பு முடித்து மருத்துவர்களாக வெளிவருவோர் எண்ணிக்கை 63, 000 தட் ஈஸ் அறுபத்தி மூன்றாயிரம்.

இந்தியாவிலேயே, ஆங்கில அலோபதி மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது கூடுதல் தகவல். ஆக, இவ்வளவு தனிச் சிறப்பு வாய்ந்த Holistic Medical science சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட, ஆளும் அரசுகள் கொடுத்த, கொடுத்து வரும் முக்கியத்துவத்தின் லட்சணம் , 65 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் மூலமாக உருவாக்கிய வெறும் எட்டாயிரம் சித்த மருத்துவர்கள்தான்.

65 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் "தமிழுக்காக, தமிழர்களுக்காக" செய்த 'தியாகங்களின்' எடுத்துக் காட்டு இந்த எட்டாயிரம், பத்தாயிரம், பிம்பிளிக்கி பிளாபி.

இது ஒருபுறம் இருக்க, இந்த எட்டாயிரம் சித்த மருத்துவர்களும், கொரோனாத் தாக்கம் ஏற்பட்ட காலத்தில் இருந்து எங்கே போனார்கள் எனும் கேள்வியும் எழுகிறது.

இந்த எட்டாயிரம் பேர் போல எந்தப் பட்டப் படிப்பும் படித்திராத திருத்தணிகாசலம் கூட தன் உயிரே போனாலும் பரவாயில்லை, தான் சிறையில் தள்ளப்பட்டாலும் பரவாயில்லை என ஒற்றை மனிதராக நின்று கத்திக், கதறி, அழுது, புரண்டாவது "சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு, ஆராயுங்கள்" என உரக்கக் கத்தவாவது செய்தார்.

நான் ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டதைப் போல திருத்தணிகாசலத்தின் அணுகுமுறையும், ஆர்ப்பாட்டமும்தான் தவறே தவிர அவரது ஆர்வம் பாராட்டுதலுக்குரியது.

அந்த நபரிடம் இருக்கும் ஆர்வம் கூட இந்த எட்டாயிரம் பேரிடம் இல்லாமல் போனது ஏன்? இதில் கொடுமை என்னவெனில் திருத்தணிகாசலத்தைப் போலி மருத்துவர் எனப் புகார் கொடுத்தது ஓமியோபதித் துறை .

அது எப்படி ஒரு (ஓமியோபதி) மருத்துவத் துறை சார்ந்த மருத்துவர்கள் இன்னொரு (சித்த) மருத்துவத்துறை சார்ந்தவரைப் போலி எனப் புகார் கூற முடியும்? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டாம், இந்த சித்த மருத்துவ சிகாமணிகளுக்குக் கூடவா கேட்கத் தோன்றவில்லை ?!

காரணம், Ayush எனும் நடுவண் அமைச்சகத்தில் கோலோச்சுபவர்கள் ஓமியோபதிகளும், ஆயுள்வேதிகளும். அடிமைகள் போலக் கிடப்பவர்கள் பட்டம் பெற்ற இந்த சித்த மருத்துவ சிகாமணிகள் . இவர்களே, தங்களைச் சித்த மருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுகிறார்களோ என்னவோ?!

தமிழர் அறிவியல்களின் நிலை இதுதான். திராவிடத்தால் வீழ்த்தப்பட்டு குற்றுயிராகக் கிடக்கிறோம். ஆரியத்தால் அடையாளமிழந்து தவிக்கிறோம்.

நன்றி - வளர்மெய்யறிவான்.