தேர்வுகளும் ஊழலின் உறைவிடங்களா? நீதிவிசாரணை கேட்கும் த. வா. கட்சி!

அரசு நடத்தும் தேர்வுகளே ஊழலின் உறைவிடங்களாகிவிட்ட நிலையில், இந்த வொவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று த.வா.கட்சித் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் பலவகையான தேர்வுகளில் நடந்துள்ள ஊழல்கள் தொடர்பாக விவரித்துள்ளார். 

அந்த அறிக்கை விவரம்:

ஊழல் என்றால் அது பணத்தோடு மட்டுமே தொடர்புடையது அல்ல; எல்லாத் துறைகளிலும் எல்லா விடயங்களிலும் நடைபெறும் முறைகேடுகளும் ஒழுங்கீனங்களுமே ஊழல்தான்.

அண்மையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்து, அதற்குக் காரணமானவர்கள் என இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை, தேடுதல் வேட்டை தொடர்கின்றன. அதனையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அப்படி குற்றம் சாட்டுபவர்கள், 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோரே.

2012ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வை அறிவித்தது தமிழக அரசு. அதில் தாள்ஒன்று இடைநிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படும் என்றது அந்த அறிவிப்பு. அந்தத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர். ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இரண்டாவது முறை நடந்த தேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்கள் எடுத்த மதிப்பெண் விவரத்தை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாக நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் மதிப்பெண் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது. அப்படியென்றால் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றே பொருளாகிறது.

முதல் கட்ட தேர்வில், காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்றவர், மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள்ளார். காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்களும் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம், ஒரே தேர்வு அறை!

அந்தத் தேர்வில் முதலிடம் பிடித்த தேர்வர், தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக பேட்டி அளித்தார்: ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வளவு மதிப்பெண்னை அதன் பின்னர் இதுவரை யாரும் எடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம், அதிசயம். ஆக, அரசுப் பணிகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிகிறது .

அதற்குப் பிறகு நடந்த தேர்வுகள் 3 மணி நேரம் என கால அளவு நீட்டிக்கப்பட்டது. அப்படி 2013ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றும் இதுவரை யாரையும் பணியில் நியமிக்கவில்லை. காரணம், முன்பு நடந்த தேர்வுகளில் முறைகேடு செய்து தகுதியற்றவர்கள் பணி நியமனம் பெற்றதால், காலியிடம் இல்லை என்று பின்னர் தேர்வு எழுதியவர்கள் யாரும் பணியில் நியமிக்கப்படவில்லை.

அதேசமயம் ஊழல் செய்து உள்ளே நுழைந்தவர்களை அடையாளம் காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் இளங்கோவனும் வடிவேல் சுந்தரும்.

அதன்பிறகு 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்கிறார்கள். இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசுத் தரப்பில் பதில் மனுவே தாக்கல் செய்யவில்லை.

2018 ஏப்ரலில் நடந்த தேர்வில் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களில் 4 ஆயிரத்து 979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் அதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வுத் தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது, இதனையடுத்து தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்டது. அப்போது போலி மதிப்பெண்களை அளித்து 200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது அம்பலமாகியது.

இந்த முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் ஆசிரியர் தேர்வு வாரியமே விசாரணை மேற்கொண்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 செப்டம்பர் 23ந் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்தான் பிரச்னையே! ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு, அதற்குப் பதில் அவர்களைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், “அடிப்படைக் கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்கிறீர்கள்.

ஆனால் டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழிச் சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்றது. ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசுத் தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று தேர்வர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதற்கிடையே அரசு தேர்வுத் துறையானது, தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பியது. தொழில்நுட்பத் தேர்வை நடத்திய அரசுத் தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று விளக்கம் அளித்துவிட்டதால், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர். அப்போது அரசு தொழில்நுட்பத் தேர்வு தமிழ்வழியா, ஆங்கில வழியா என தனக்குத் தெரியாது என தேர்வுத்துறை இயக்குநர் அறிக்கை வெளியிட்டார்.

தேர்வு எழுதும் மொழி என்று ஒரு காலம் வைத்து தேர்வு நடத்திவிட்டு தமிழ்வழிச் சான்றிதழ் தர மறுப்பு தெரிவிப்பதை வைத்து பார்க்கும்போது மெகா ஊழல் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நடந்துள்ளது என தெளிவாக தெரிகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டிய கல்வித்துறையின் முதன்மைச் செயலர் கண்டுகொள்ளாமல் இருப்பதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு ஊழல் பிரச்சனை அத்தோடு முடியவில்லை; ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50, மொத்த மதிப்பெண் 100 ஆகும். இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதுவும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் விடைக் குறிப்புகளை வைத்து மீண்டும் திருத்தினர். அப்போது தமிழையே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பிழையுடனும், தவறுதலாகவும் எழுதியிருந்தனர். அதுமட்டுமன்றி பக்கத்தை நிரப்புவதற்காக கேள்விக்குத் தொடர்பில்லாத பல தகவல்களையும் எழுதி இருந்தது தெரியவந்தது.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இந்த மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.