நான்கு மிருகங்களுக்கு என்கவுன்டர்! கொண்டாடும் மக்கள். சட்டத்தின் ஓட்டையில் தப்பிவிடுவார்கள் என்று சுட்டுக்கொல்வது சரிதானா?

கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மரணம் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்றால், ஒன்பதே நாளில் அவரை அந்த நிலைக்குத் தள்ளிய நான்கு கொலையாளிகளையும் என்கவுன்டர் மூலம் போட்டுத்தள்ளிய போலீஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதனை ஒரு சந்தோஷமான நிகழ்வாக பொதுமக்களும், மாணவிகளும் கொண்டாடி வருகின்றனர். இப்படி அதிரடியாக தண்டனை கொடுக்கப்பட்டால்தான், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறையும் என்றும், சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்றும் இந்த என்கவுன்டருக்கு மக்கள் ஆதரவளிக்கின்றனர்.

அதேநேரம், இப்படி காவல்துறையினரே அவசரப்பட்டு தீர்ப்பு கொடுப்பது சரிதானா என்றொரு கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாகவே குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று கே.பாலகோபால் சொல்லும் கருத்தைக் கவனியுங்கக்ள்.

தூக்குதண்டனை பழிக்கு பழி வாங்குகிற தண்டனையாகும். 'நீ ஒருவரைக் கொன்றாய், அதனால் நீயும் செத்தொழிய வேண்டும்' என்கிறது. இத்தகைய தர்க்கமானது தண்டனை என்பது பழிவாங்கல் மட்டுமே என வரலாற்றில் கருதப்பட்ட காலத்தின் பண்பாகும்.

தண்டனைகளைப் பழிவாங்கல் என்கிற கோணத்தில் இருந்து மட்டும் அணுகாமல், நீதியின் பார்வையில் இருந்தும் நோக்கினால் 'பல்லுக்குப் பல்' என்கிற தர்க்கம் தவிடுபொடியாகிறது. யாருடைய வீட்டையோ கொளுத்தியவன் என நிரூபிக்கப்பட்ட குற்றவாளியின் வீட்டை கொளுத்தியா அவனைத் தண்டிக்கிறோம்? அவனைச் சிறைக்கு அனுப்புகிறோம் இல்லை அபராதம் விதிக்கிறோம்.

வேறொருவனின் குழந்தையைக் கடத்துபவனின் குழந்தையைக் கடத்த வேண்டுமென்றா தீர்ப்பெழுதுகிறோம்? பிறகு ஏன், மரணத் தண்டனையில் மட்டும் இப்படிப் பாரபட்சம்? பழிக்கு பழி வாங்குவதே நியாயமான தண்டனை என்கிற எண்ணத்தின் எச்சங்களை மரணதண்டனை என்கிற பெயரில் இனிமேலும் தூக்கிப்பிடிக்க வேண்டுமா.

இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. இங்கே நடக்கும் ஒவ்வொரு குற்றத்திலும் சமூகத்திற்கும், குற்றத்தை செய்த தனிநபருக்கும் ஓரளவிற்குப் பங்கிருக்கிறது. குற்றம் புரிவதற்கான சூழ்நிலைகளைச் சமூகம் உருவாக்குகிறது; குற்றத்தில் ஈடுபட வைக்கிறது. ஆகவே, குற்றத்தை செய்யத் தானாகவே முடிவெடுத்த குற்றவாளியோடு சமூகத்தின் கரங்களும் குற்றத்தில் பதிந்திருக்கிறது.

ஆகவே, தரப்படும் தண்டனையானது, குற்றத்திற்குக் குற்றவாளியை மட்டுமே முழுப்பொறுப்பாளி ஆக்க கூடாது. இதைத்தான் மரணத் தண்டனை செய்கிறது. கொலை புரிந்தவனை 100% கொலைக்குப் பொறுப்பாக்குகிறது என்கிறார்.