இடைத்தேர்தல் நடைபெறும் ஆண்டிப்பட்டியில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தலை ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியிலும் தேர்தல் ரத்து! டெல்லியில் அதிகாரிகள் அவசர ஆலோசனை!
ஆண்டிப்பட்டியில் உள்ள தினகரன் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்கு தலா 300 ரூபாய் வீதம் என கொடுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் அதிகாரிகளிடம் சிக்கியது. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்கிற விவரமும் அதில் இடம்பெற்றிருந்தது.
இது மட்டுமல்லாமல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு வாக்களித்த தபால் ஓட்டு சீட்டு ஒன்றும் அங்கிருந்து சிக்கியது. இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி தொகுதியில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்களை விவரங்களை வருமான வரித்துறை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் எப்படி பணம் பண்டல் பண்டலாக சக்தி உள்ளதோ அதே போல்தான் வேலூர் காட்பாடியில் பணம் பண்டல் பண்டலாக சிக்கியது. எனவே ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை வாக்குப்பதிவு என்கிற நிலையில் இந்த ஆலோசனை ஆண்டிபட்டி வேட்பாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.