பாமக வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம்! வன்னிய பெருந்தலைவர்கள் திடீர் அறிவிப்பு! பீதியில் ராமதாஸ்!

நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம் என அனைத்து வன்னிய பெருந்தலைவர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அனைத்து வன்னிய  பெருந்தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் ஒருங்கிணைப்பாளர் ராம நாகரத்தினம், நாடாளுமன்றம் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றார்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வன்னியர் அல்லாத  சமூகத்தினருக்கு  போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் வன்னியர்களுக்கு ராமதாஸ் செய்யும் மிகப்பெரிய  துரோகம் இது என்றும் அவர் கூறினார். 

இதுவரை ராமதாஸ் வன்னிய சமூகத்திற்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்றும் அவருடைய சுய லாபத்திற்காக மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியை பயன்படுத்திக் கொண்டார் என்றும் அவர் விமர்சனம் செய்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

தற்போது தான் காடுவெட்டி குரு மகன் கனலரசனை பாமக தரப்பு அமைதிப்படுத்தியது. ஆனால் அதற்குள் வன்னிய சமுதாய கூட்டமைப்பு பாமகவிற்கு எதிராக புறப்பட்டுள்ளது ராமதாஸ் தரப்பை அதிர வைத்துள்ளது.