ராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி ! நான் ஒரு விவசாயி ஆனால் விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்…?

கொரோனா தொற்று அபாயம் குறித்து அச்சமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அந்த வகையில் இன்று ராமநாதபுரத்தில் ஆய்வு நடத்தி சுமார் 167.61 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.24.24 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடனான மோதலின் போது உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கினார். மேலும் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “தமிழகத்தில் சரியான சமயத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் மழைநீர் சேமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மேலும், நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது.

நான் ஒரு விவசாயி, இது ஆனால் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின் தான் அதை விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும்..’’ என்று கூறினார்.