இனிமே திங்கட்கிழமை சிறப்பு பிரச்னைகள் தீருமாம்..! எடப்பாடியாரின் சிறப்பு அறிவிப்பு

தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், கடந்த ஜூலை 18 ஆம் தேதி அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மக்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.


இந்த நிலையில் தமிழக அரசின் அடுத்த நடவடிக்கையாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் என்ற ஒரு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை அனைத்து மாவட்டங்களில் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததது. 

இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் உள்ள வார்டுகள் மற்றும் கிராமந்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று, தீர்வு காண, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக சேலம் வனவாசி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி முதற்கட்டமாக துவக்கி வைக்கிறார்.  

இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  இன்று மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு 3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். தொடர்ந்து நாளையும் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் மனுக்களை வாங்க உள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், அனைத்து நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகள், மற்றும் கிராமப்புறங்களில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெற்று, இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு வார்டுகளுக்கும் தலா 25 ஆயிரம் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம். எப்படியோ மக்கள் குறை தீர்ந்தால் சரிதான்.