குட் பாய் சொன்ன இசக்கி சுப்பையா? கட்சி ஆபிசை எப்படி காப்பாற்றப் போகிறார் டிடிவி?

தெனாவெட்டுக்கு சொந்தக்காரரான தினகரன் இப்போது முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் இருக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வராமல் ஒளிந்துகொண்டு இருக்கிறார். தங்க.தமிழ்செல்வன் கட்சி மாறியதும் வெளியே வந்து பேசியவர், இப்போது இசக்கி பேசியதும் மீண்டும் பேசிவிட்டு பதுங்கிவிட்டார்.


இன்று பேசிய இசக்கி சுப்பையா, ‘அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா, தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை. மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். அதனால், வரும் 6 தேதி முதல்வர் துணை முதல்வர் முன்னிலையில் 25,000 பேர் தென்காசியில் நடைபெறக்கூடிய விழாவில் அதிமுகவில் இணைய உள்ளோம்-’ என்று தெரிவித்தார்.

உடனே அதற்கு பதில் சொல்லும் வகையில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், `கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதற்கு முன்னாள் இசக்கி சுப்பையா 48 நாள் அமைச்சராக இருந்தவர். எங்கள் கட்சியில் அவரை அமைப்புச் செயலாளராக போட்டது உங்களுக்குத் தெரியும். அவர் அ.தி.மு.க.வுக்குப் போகப்போகிறார் என்பதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. 

எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்து போய்விட்டோமா. பன்னீர் செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்து போய்விட்டோமா. எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போகிறதினால் எங்கள் இயக்கம் இன்னும் வலுவடையுமே தவிர பாதிப்படையாது. வெளியே போவதற்கு ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அது உங்களுக்கே தெரியும். என்னிடம் வந்தே நிறைய தடவை சொல்லுவார்.

`எனக்கு 70 கோடிக்கு மேல் பில் பாக்கி இருக்கு. நான் கோர்ட்டுக்குப் போய்தான் வாங்க வேண்டி இருக்கிறது. வேலுமணி எனக்கு ரொம்ப பிரச்னை கொடுக்கிறார்' என்று. நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் போகலாம். அதுதான் உண்மை. எங்களுக்கு இது பின்னடைவா என்று சொல்கிறீர்கள். அது வருங்காலம் முடிவு செய்யும்.' என்று மீண்டும் தெனாவெட்டாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், அ.ம.மு.க. அலுவலகம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பதால், இனியும் அங்கே அ.ம.மு.க. அலுவலகம் நீடிக்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தினகரன் மறுத்தாலும், நிச்சயம் கட்சி அலுவலகம் மாற்றப்படும். அதனால், கட்சி பதிவு செய்வதிலும் சிக்கல் வரும் என்றே தெரிகிறது. எல்லோரையும் விரட்டிவிட்டு தினகரன் மட்டும் தனியே என்ன செய்யப்போகிறார் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்.