கொரோனாவின் தீவிரம் கூடப்போகிறதா..? எச்சரிக்கும் மருத்துவர்.

மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது போல் செய்திகள் வருகின்றன. நம்மில் பலரும், உற்றார் உறவினர் இதனால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து, அலட்சியம் கூடி வருகிறது…இன்னும் ஒரு மாதத்தில் இதன் தீவிரம் கூடும் அபாயம் இருக்கிறதது என்று எச்சரிக்கை செய்கிறார் மனநல மருத்துவர் ருத்ரன்.


பல மருத்துவர்கள், தொலை-சிகிச்சை முறையில் இணைய-கணினி வழியாகவே பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, பேசி, சிகிச்சைகள் பரிந்துரைக்கிறார்கள். என்னால் அது முடியவில்லை. என்னிடம் வருபவர் எப்படி உள்ளே நுழைகிறார் என்பதிலிருந்து நான் சொல்வதற்கு என்ன மாதிரி உடல் மொழியில் எதிர்வினை வருகிறது என்பது வரை கவனிப்பது எனக்கு அவசியமாகிறது. இதனாலேயே வருபவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வருபவர்கள் எண்ணிக்கை போக்குவரத்து வசதிகள் கூடுவதால் கூடுகிறது.

மார்ச் முதல் இந்த அக்டோபர் வரை, மொத்தம் நான்கு நாட்கள் மட்டுமே ( அதுவும் ஊர்முடக்கத்துள் தீவிர முடக்கம் நடத்த நினைத்த நாட்களில்) என்னிடம் வருபவர்களைப் பார்க்கவில்லை. வருபவர்கள் “இன்று இவ்வளவு பேர் தான் பார்க்க முடியும்” என்று சொன்னாலும் வாசலில் நின்று நான் வெளியே போகும் போது பேசி ப்ரிஸ்க்ரிப்ஷனில் மாற்றம் செய்து கொள்பவர்களும் அதிகம். நண்பர்களும் உறவினர்களும் வேண்டாம் என்று சொல்கிறார்கள், அவர்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் என் வாசலில் காத்திருப்பவர்களைப் பார்த்ததில்லை.

முகக்கவசம் அணிந்து, ஓர் அறையில் மூன்று மணி நேரம் உட்கார்து, பேசிக் கொண்டிருந்தால்… கவசம் ஈரமாகும், அசதி கூடும்,மனத்துள் எரிச்சலும் வரும். அந்த நேரத்தில் வருபவர் பிரச்சினை தவிர்த்து வேறேதும் பேசுவதும், கூட வருபவர்கள் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள கூகுள் ஞானத்தை வெளிப்படுத்த முயல்வதும் எரிச்சல் மீறி கோபமாகவும் மாறும். இனி யாரையும் பார்க்க வேண்டாம் என்றும் தோன்றும்.ஆகவே உங்கள் மருத்துவரிடம் போகும் போது சுருக்கமாகவும் தெளிவாகவும் பிரச்சினைகளைக் கூறி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

இன்னும் இரண்டு மாதங்களாவது நாம் சிரமப்பட்டு வரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். 

இக்காலத்தில் take care என்பது சம்பிரதாயமான பிரயோகம் இல்லை என்கிறார்.