பிறந்த ஊர் மக்களுக்கு இலவச மருத்துவம்! தள்ளாத வயதிலும் சேவை செய்து நெகிழ வைக்கும் திருச்செந்தூர் டாக்டர்!

மருத்துவத் தொழில் என்பது பணம் சம்பாதிக்க அல்ல; மக்களுக்கு சேவை செய்யவே; என்பதை உணர்த்த ஓய்வு பெற்ற பிறகும் இலவச சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் முருகேசன்.


திருச்செந்தூர் அருகே நாதன்கிணறு கிராமத்தில் பிரதி மாதம் முதல் ஞாயிறன்று இலவச மருத்துவ சேவை நடைபெறுகிறது. இந்த கிராமத்து மக்களுக்கு மாதம் ஒருநாள் வந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார் இதே கிராமத்தில் பிறந்த மருத்துவர் முருகேசன் 

மதுரை மருத்துவ கல்லூரியில் படித்த முருகேசன் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்தவர். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 வருடம், மதுரை அரசு மருத்துவமனையில் 8 வருடம் பணியாற்ற முருகேசன் 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது முருகேசன் சென்னையில் வசித்தாலும் மாதம் தவறாமல் சொந்த ஊருக்கு சென்று இலவச சிகிச்சை அளித்து வருகிறார். 2015ல் இலவச மருத்துவ முகாமை தொடங்கிய மருத்துவர் முருகேசன் இதுவரை 48 முறை முகாம் நடத்தி கிராம மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  

துரைசாமி நாடார் – பால்கனி அம்மாள் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி இலவச சிகிச்சையை நடத்தி வரும் முருகேசன் ஒவ்வொரு கிராமத்திலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு ஒவ்வொரு மருத்துவரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இரத்தசோகை, வைட்டமின் சத்துக்குறைபாடு, கால்சியம் குறைபாடு காரணமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்தாலே ஓரளவு நோய்கள் வருவதைத் தடுக்க முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் முருகேசன்.

மேலும் அரவிந்த் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் நடத்தி இதுவரை 154 பேருக்கு இலவச கண்ணாடியும், 33 பேருக்கு கண்புரை நீக்க அறுவைசிகிச்சையும் நடக்க உதவியுள்ளார் மருத்துவர் முருகேசன்.