பழம்பெரும் இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரன் காலமானார்!

உதிரிப் பூக்கள் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மகேந்திரன் காலமானார்.


தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் உணர்வுகளையும் திரைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இவர்.

இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் தற்போது வரை பலரின் விருப்பமான படங்களில் ஒன்றாக உள்ளது. இதேபோல் உதிரிப்பூக்கள் ஜானி போன்ற திரைப்படமும் மகேந்திரனின் பெருமையை சொல்லும் காவியங்கள்.

அண்மையில் வெளியான ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் கூட மகேந்திரன் நடித்துள்ளார். விஜயின் தெறி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்து இருப்பார் மகேந்திரன்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரது மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய தந்தைக்காக ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறும் ஜான் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகேந்திரன் உடல் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனையை தொடங்கினர். ஆனாலும் மகேந்திரன் சிகிச்சை பலனின்று காலமாகியுள்ளார்.