18 வயது மகள், மகன், மனைவியுடன் தண்டவாளத்தில் அமர்ந்த கணவன்! 4 பேரும் உடல் சிதறி பலி! திண்டுக்கல் பரிதாபம்!

திண்டுக்க மாவட்டம் கொடைக்கானல் ரயில் ரோடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயில் வருவது தெரியாமல் அடிபட்டு உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்ட உத்திராபதி என்பவர் திருமணத்திற்கு பிறகு திருச்சியில் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியான உத்திராபதிக்கு சங்கீதா என்ற மனைவியும், அபிநயஸ்ரீ, ஆகாஷ் என்ற பிள்ளைகளும் உள்ளனர். 

இந்நிலையில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த அவர்கள் கொடைக்கானல் ரோடு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அப்போது அங்கு வந்த விரைவு ரயில் நால்வர் மீது படுவேகமாக மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் துண்டு துண்டாக இருந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உத்திரபாதிக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தண்டவாளத்தில் அமர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ரயில் வருவதை கவனிக்காமல் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகின்றனர்