ரஜினிகாந்த் சொல்லும் இரும்புக்கரம் யாருடையது..? ரஜினி பேச்சுக்கு டீடெய்ல்டு அலசல்.

ரஜினி ஒரே ஒரு வரி பேசினாலும், அதை வைத்து வாரம் முழுவதும் விவாதம் நடப்பது உண்டு. இந்த வாரம் கொஞ்சம் ஓவராகவே பேசியிருக்கிறார். அதனால், அவர் என்ன பேசினார் என்பதற்கு ஒரு விளக்கவுரையே கொடுத்திருக்கிறார், எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்.


டெல்லியில் நடந்த பெருங்கலவரமும் இருபதுக்கும் அதிகமான உயிர்பலிகளும் ரஜினியின் மௌனத்தைக் கலைத்திருக்கின்றன. போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும் என்று சொன்ன அவர், போராட்டங்கள் குறித்து கணித்துச் சொல்லத் தவறிய மத்திய உளவுத்துறையை விமர்சித்ததோடு, போராட்டத்தை ஒடுக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்திருக்கிறார்.

டெல்லி போராட்டம், அதில் உருவான வன்முறை, அதன் நீட்சியாக வெடித்த கலவரம் ஆகியன குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தெரிவித்த கருத்துகள் பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் ரஜினி? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

சிஏஏவால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்பதுதான் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி சொன்ன முதல் செய்தி. உண்மையில், அதை அவர் இப்போது சொல்லவில்லை. சில தினங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார். ஆனால் அதன்பிறகு உருவான டெல்லி கலவரத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது ரஜினியிடமிருந்து எந்தவொரு குரலும் ஒலிக்கவில்லை.

அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான், திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த சமயத்தில் டெல்லியில் போராட்டம் வெடித்திருக்கிறதென்றால், அது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்று சொன்ன ரஜினி, அதற்காக மத்திய அரசைக் கண்டிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

எல்லாவற்றையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும் என்பது ரஜினி சொன்ன முக்கியமான அம்சம். இங்கே ரஜினி அடக்கவேண்டும் என்றது சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைத்தான். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருந்தால் எந்தப் பிரச்னையும் எழுந்திருக்காது என்பதே ரஜினியின் பார்வை.

டெல்லி தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த மதரீதியிலான பிரசாரங்கள், வெறுப்புப் பேச்சுகள் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, ”மதத்தை வைத்து சில கட்சிகள் மக்களைத் தூண்டி விடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டியதோடு, அந்தச் செயலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்னைகள் வரும் என்று எச்சரித்தார்.

அந்தப் பதிலில், மத ரீதியிலான அரசியலில் ஈடுபடுவது யார் என்றோ, வெறுப்புப் பேச்சுகளைப் பேசியது யார் என்றோ, மக்களை மதரீதியாகத் தூண்டுவிடுவது யார் என்றோ ரஜினி வெளிப்படையாகச் சொல்லவில்லை. அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு, பாஜகவினர் சிலரின் வெறுப்புப் பேச்சுகளை நினைவூட்ட, யாரோ சிலர் சொல்வதை வைத்து, எல்லோரையும் குறைசொல்லக்கூடாது என்று சொன்ன ரஜினி, கிடைத்த வாய்ப்பில் ஊடகங்களுக்கு ஓர் அறிவுரையைக் கொடுத்தார்.

பதற்றம் உருவாகியிருக்கும் சூழலில் ஊடகங்கள் நியாயமாகச் செயல்படவேண்டுமே தவிர போராட்டத்தைத் தூண்டிவிடக்கூடாது என்றார். இது ஊடகங்கள் மீது ரஜினி வைத்த கடுமையான விமர்சனம். சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்தவை என்று எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டங்களை ஊடகங்களே தூண்டிவிட்டது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்க ரஜினி முனைந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

உண்மையில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரே இலக்கு, அந்தச் சட்டம் திரும்பப்பெறப்படவேண்டும் என்பதுதான். ஆனால் அப்படியொரு வாய்ப்பே இல்லை என்ற கருத்தைப் பொதுவெளியில் முன்வைத்திருக்கிறார் ரஜினி. ஆம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற சிஏஏ சட்டம் திரும்பப்பெறப்படும் என்று நான் நம்பவில்லை என்று சொன்ன ரஜினி, சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இங்கே எழுகின்ற முக்கியமான கேள்வி, இந்தியா முழுக்க மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் முக்கியமான மாநிலங்களின் சட்டமன்றங்களில் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எந்த நம்பிக்கையில் சிஏஏ வாபஸ் பெறப்படாது என்ற முடிவுக்கு ரஜினி வந்தார் என்பதுதான்.

இதற்கு இரண்டு பதில்கள் இருக்கலாம். ஒன்று, சிஏஏ வாபஸ் பெறப்படக்கூடாது என்பது ரஜினியின் எண்ணமாக இருக்கவேண்டும். இரண்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிஏஏ திரும்பப்பெறப்படாது என்று பாஜக தரப்பிடமிருந்து உத்தரவாதம் வந்திருக்கவேண்டும். இந்த இரண்டில் எது சரி என்பதை ரஜினிதான் சொல்லவேண்டும். மூன்றாவதாக ஒரு காரணம் இருந்தால், அதையும் அவருக்கே வெளிச்சம்.

இந்த இடத்தில் ரஜினியின் எச்சரிக்கை உணர்வு வியப்பைத் தருகிறது. ஆம், சிஏஏ திரும்பப்பெறப்படாது என்று சொல்வதால், நான் பாஜகவின் ஊதுகுழல் என்றோ, பாஜகவின் ஆள் என்றோ, எனக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்றோ மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் சொல்வார்கள். அவர்கள் அப்படிச் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. எது உண்மையோ அதைத்தான் நான் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய மூன்றைக் குறித்தும் ரஜினி பேசியிருக்கிறார். இந்தியாவில் இருப்பவர்களில் யார் நம்முடைய நாட்டைச் சேர்ந்தவர்கள், யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவையெல்லாம் அவசியம் என்பது ரஜினியின் கருத்து. ஆனால் அந்த மூன்றையும் ரஜினி குழப்புகிறார் அல்லது அவற்றைப் பற்றிய ரஜினியின் புரிதலில் குழப்பம் இருக்கிறது என்பது விமர்சகர்களின் பார்வை.

அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, என்.ஆர்.சி பற்றி அரசு தெளிவாகச் சொல்லிவிட்டதால், அதைப் பற்றித் திரும்பத்திரும்பப் பேசி குழப்பக்கூடாது என்றார் ரஜினி. அந்தப் பதிலைச் சொல்லிமுடித்த அந்தத் தருணத்தில்தான் ரஜினியிடமிருந்து அந்த முக்கியமான கருத்து வெளியானது. ஆம், அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும், இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுப் போகவேண்டும் என்றார்.

இங்கே அவர் ராஜினாமா செய்யச் சொன்னது யாரை? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையை? நிச்சயமாக இருக்காது. ஏனென்றால், கலவரத்தை அடக்கும் காவல்துறையை இயக்கக்கூடிய அதிகாரம் அவருக்குக் கிடையாது. அந்த அதிகாரம் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உள்ளது. ஆகவே, அவரை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கவேண்டும். இல்லாவிட்டால், அமித்ஷா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் கட்டுப்படுத்தும் பிரதமர் மோடியை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டும்.

இருவரில் யாரைச் சொன்னார் ரஜினி? கிருஷ்ணரென்றும் அர்ஜுனனென்றும் ரஜினியால் புகழப்பட்ட மோடி – அமித்ஷா இருவரில் ரஜினி குறிப்பிடப்பட்டது யார்? அதுவும் ரஜினி சொன்னால்தான் உண்டு. பார்க்கலாம், சொல்கிறாரா, கடந்து செல்கிறாரா என்று!

இங்கே இன்னொரு விளக்கமும் ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன் இரும்புக்கரம்? அந்தக் கரம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டும்? போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதா? அல்லது போராட்டத்தை எதிர்ப்பவர்கள் மீதா? அல்லது மக்கள் போராட்டங்களில் வன்முறையை விதைப்போர் மீதா? அதையும் சொல்லிவிடுங்கள் ரஜினிகாந்த்!

அடேங்கப்பா, விளக்கம் போதுமா?