முதலமைச்சருக்கு இளைஞர் கொடுத்த பளார்! தேர்தல் பிரச்சாரத்தில் விபரீதம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இளைஞர் ஒருவர் ஓங்கி ஒரு அறை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியின் மோதி நகர் பகுதியில் இன்று மாலை அவர் வழக்கம் போல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

திறந்த வேனில் நின்றபடி வாக்காளர்களை நோக்கி கை அசைத்தபடி கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென சிவப்பு நிற ஆடை அணிந்த நபர் ஒருவர் துள்ளிக் குதித்து கெஜ்ரிவால் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். இதனால் நிலை குலைந்த கெஜ்ரிவால் சுதாகரிப்பதற்குள் அந்த நபர் மீண்டும் அறைய முற்பட்டார்.

ஆனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த நபரை பிடித்து நையப்புடைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த இளைஞர் அலறிய நிலையில் போலீசார் வந்து மீட்டுச் சென்றனர். எதிர்கட்சியினர் திட்டமிட்டு கெஜ்ரிவாலை தாக்கியிருப்பதா ஆம் ஆத்மி கூறியுள்ளது. அதே போல் டெல்லி போலீஸ் முதலமைச்சரை காக்க தவறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.