டின்னரும் கிடைச்சது! ஓசி ரைடும் கிடைச்சது! சொமாட்டோவை யூஸ் பண்ணிய ஸ்மார்ட் இளைஞன்!

ஐதராபாத்: நள்ளிரவில் கேப் கிடைக்காததால், சொமாட்டோ டெலிவரி பாயிடம் வாடிக்கையாளர் லிஃப்ட் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.


ஐதராபாத்தைச் சேர்ந்த  ஓபேஸ் கொமேரிஷெட்டி என்பவர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.  அதில், அவர், ''நள்ளிரவு 11.50 மணிக்கு இன்ஆர்பிட் மால் ரோட் பகுதியில் நான் காத்திருந்தேன். ஆனால், ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது, உபெர் ஆப் பயன்படுத்தி, கார் புக் செய்ய முயன்றேன். ஆனால், வாடகை கட்டணம் ரூ.300 என்றிருந்தது. இது மிக அதிகமாக இருந்ததால் குழப்பமடைந்தேன். நீண்ட யோசனைக்குப் பின்னர் எனக்கு ஒரு ஐடியா வந்தது. எனக்கு அருகில் இருந்த உணவகத்தில் இருந்து ஒரு முட்டை தோசை வேண்டும் என, சொமாட்டோவில் ஆர்டர் செய்தேன்.

அதனை எடுத்துக் கொண்டு டெலிவரி பாய் ஒருவர் வந்தார். ஆனால், எனது டெலிவரி முகவரியாக, எனது வீட்டு முகவரியை கொடுத்திருந்தேன்.   டெலிவரி பாய்,  அந்த உணவகத்தில் வந்து தோசையை வாங்கிக் கொண்டு, எனக்கு எடுத்து வர முயன்றார்.

அப்போது, அவரை அழைத்த நான், அந்த முகவரி என்னுடையதுதான், ஆட்டோ, கேப் எதுவும் கிடைக்காததால் இங்கேயே நிற்கிறேன். என்னை என் வீட்டில் விட்டுவிட்டு, அப்படியே டெலிவரியும் கொடுக்கும்படி கேட்டேன்.

அவரும் அதேபோல செய்தார். நள்ளிரவில் எனக்கு உணவு டெலிவரியும் செய்து, என்னை வீட்டில் கொண்டுவந்து இறக்கியும் விட்ட சொமாட்டோவிற்கு மிகவும் நன்றி,'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா படத்தில் வருவதுபோல இந்த ஐடியா உள்ளதாக, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.