மரண வீட்டில் செய்வதறியாது தவிக்கும் ஏழைகள்! அனைத்து உதவிகளையும் செய்து மரணத்தையும் மரியாதையாக்கும் கோவை தாய்மை அறக்கட்டளை! நெகிழ்ச்சி ரிப்போர்ட்!

மரண வீட்டில், செய்வதறியாது தடுமாறும் குடும்பத்தினருக்கு, அனைத்து உதவிகளையும் செய்து மரணத்தை மரியாதையாக்கும் கோவை தாய்மை அறக்கட்டளை!


மரணம் நிகழ்ந்து விடுகிற வீடுகளில் உள்ளோர் துக்கித்து அழுது கொண்டே இருப்பார்களே தவிர, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாத அளவுக்கு உடைந்து நொறுங்கிப் போய் இருப்பார்கள்... உறவுகளும் நண்பர்களுமே சவ அடக்கம் வரை அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

வசதியான நிலைகளில் இருப்போர் கூட இதுபோன்ற நேரங்களில் தத்தளித்துத் தடுமாறித்தான் போய் நிற்பார்கள்.பண வசதி அற்ற ஏழைகளின் நிலையோ இன்னும் மோசமானது. மருத்துவச் செலவுகளில் அனைத்துப் பொருளாதாரத்தையும் கரைத்துவிட்டு கைகளில் காசுகள் இல்லாமல் சவ அடக்க ஏற்பாடுகளைச் செய்வதற்குக் கூட கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கும் அவர்களின் நிலையோ சொல்லிமாளாத மிகத் துயரம்!

"நாமெல்லாம் உறவுகளுடன்தான் இருக்கிறோம். துரதிருஷ்டவசமாய் இறக்கும்போது சிலர் ஆதரவற்றோராய் மாறிவிடுகின்றோம். எல்லோரது மரணமும், மற்றவர்களைப்போல மரியாதையான நிகழ்வுகளுடனே இருக்க வேண்டுமென்பதே தாய்மை அறக்கட்டளையின் லட்சியம். இதை நோக்கியே எங்கள் பயணம் தொடர்கிறது” என்கிறார் இந்த அமைப்பைத் துவக்கிய கோவை சதீஷ்.

கோவையில் ஆதரவற்றோர் அல்லது மிகுந்த வறுமையில் வாடுவோர் இல்லத்திலிருந்து அழைப்புக் கிடைத்தவுடன், தாய்மை அறக்கட்டளையின் உறுப்பினர்கள், தங்கள் குழந்தைகளுடன், குடும்ப சகிதமாய் சேவையாற்றப் புறப்படுகின்றனர். தங்களுடன், சாமியானா, மேஜை, நாற்காலி, டீ பிளாஸ்க், சடலத்தை வைக்கும் குளிர்சாதன சவப்பெட்டி (ஃப்ரீஸர் பாக்ஸ்) ஆகியவற்றையும் கொண்டு செல்கின்றனர். தேவைப்படும் பொருட்களை அங்கு வழங்கிய பின்னர், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்படுகின்றனர்.

வேறு ஏதேனும் உதவிகள் தேவையா என்றும் விசாரிக்கத் தயங்குவதில்லை. இதற்கெல்லாம் ஒரு பைசா கூட அவர்கள் வசூலிப்பதில்லை. பொருட்களைக் கொண்டுவரும் வாகனத்துக்கான கட்டணத்தைக் கூட இவர்கள் கேட்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னின்று நடத்துவோர் பெண்கள் என்பது நெகிழ்ச்சி தரும் மற்றொரு செய்தி.

கோவை சிங்காநல்லூர் எஸ் ஐ எச் எஸ் காலனியில், மகாத்மா காந்தி சாலையில், இயங்கி வருகிறது இந்தத் தாய்மை அறக்கட்டளை. தாய்மை அறக்கட்டளையின் இலவச நீத்தார் சேவை என்ற பேனர் கட்டப்பட்டிருந்த அந்தக் கொட்டகைக்குள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று பலர் சாமியானா நாற்காலி உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு துக்க வீட்டுக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் வேளையில் நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த தாய்மை அறக்கட்டளையின் அறங்காவலரும், கௌரவ ஆலோசகருமான கோவை சதீஷ், சரளமாய் பேசத் தொடங்கினார்.

“பூர்வீகமே கோயம்புத்தூர்தான். பெற்றோர் பழனிசாமி-ஜெகதீஷ்வரி. அப்பா மில் தொழிலாளி. எனக்கு 2 தங்கைகள். நடுத்தரக் குடும்பம். சித்ரா பகுதியில இருக்கும் பத்மாவதி அம்மாள் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடிச்சிட்டு, கே.கே.நாயுடு பள்ளியில் பிளஸ் 2 முடிச்சேன். அதுக்கப்புறம் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடிச்சிட்டு, ஏ.சி. மெக்கானிக்கா வேலை செஞ்சேன். சின்ன வயசுல இருந்தே, கஷ்டப்படறவங்களைப் பார்த்தா மனசுக்குப் பாரமா இருக்கும். நம்மால முடிஞ்ச உதவி செய்யணும்னு தோணும்.

"ஏழைக் குழந்தைகளுக்குக் கொஞ்ச நாள் இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்தேன். பல பேருக்கு ரத்த தானம் வழங்கினேன். 2008-இல் திருமணம். மனைவி சாரதா. ஏ.சி. மெக்கானிக் தொழில்ல கிடைத்த வருமானம் பத்தலை. அதனால, கட்டிடப் பராமரிப்புப் பணியில ஈடுபட்டேன்.

"சமூகப் பணிகள் ஆர்வம் காரணமாக, சில அறக்கட்டளை, அமைப்புகளோட இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டேன். இந்தச் சமயத்துல, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ஆத்மா அறக்கட்டளையோட சேர்ந்து, பல இடங்களுக்கும்போய், சடலங்களை அடக்கம் செய்ய உதவினேன். இதுக்குநடுவுல, விழிப்புணர்வு குறும்படம் இயக்க முடிவு செஞ்சேன்.

"முதல்ல, முதியோர்களோட கஷ்டத்தையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டியதோட முக்கியத்துவத்தையும் விளக்கும் `நரை’ங்கற குறும்படம் இயக்கினேன். 2011-இல் ஆதரவற்ற சடலங்கள் தொடர்பான `மிட்டாய் தாத்தா’ என்கிற குறும்படம் இயக்கினேன். எனக்குத் தெரிஞ்சி, ஆதரவற்ற சடலம் தொடர்பாக உலக அளவுல எடுத்த முதல் குறும்படம் இதுதான். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. பல பள்ளிக்கூடங்கள், அமைப்புகள், இயக்கங்கள் எல்லாம் இந்தக் குறும்படத்தைத் திரையிட்டாங்க. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், `சிறந்த படைப்பாளி’ விருது கொடுத்தாங்க. இந்த ஊக்கத்தால, தபால், நெகட்டிவ், பொய்முகங்கள் அப்படினு நிறைய குறும்படங்களை இயக்கினேன்.

"என்னோட சமூக ஆர்வத்துக்கு, இதெல்லாம் போதாதுன்னு மனசு சொல்லிச்சு. 2017-இல் தாய்மை அறக்கட்டளைங்கற அமைப்பைத் தொடங்கினேன். மனைவி சாரதா, நண்பர்கள் மகேஸ்வரி, சந்தோஷ், கார்த்தி, மோகன், கீதா, சுமலதா எல்லாம் என்னோட இணைஞ்சாங்க. அந்த வருஷம், கோயம்புத்தூர்ல டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது. இதுக்குத் தீர்வுகாணும் வகையில, கோயம்புத்தூர் மாநகராட்சியில, 100-க்கும் மேற்பட்ட இடங்கள்ல இலவசமாக நிலவேம்பு கஷாயம் கொடுக்கும் முகாம்களை நடத்தினோம். அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்திகேயன், எங்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாரு.

"அடுத்ததா, நீத்தார் சேவையில் எங்களோட கவனத்தைத் திருப்பினோம். நண்பர்கள் உதவியோட, சாமியானா, மேஜை, நாற்காலிகள், டீ பிளாஸ்க் வாங்கினோம். ஆதரவற்றோர் அல்லது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோர் இறப்பு நிகழ்வுக்குப் போய், இலவசமாக இதெல்லாம் கொடுத்தோம். இதுக்கு நிறைய வரவேற்பு இருந்தது. இதேபோல 10 மாதத்துல, 100-க்கும் மேற்பட்ட குடும்பத்துக்கு `நீத்தார் சேவை’ப் பொருட்கள் வழங்கினோம். இதைப் பார்த்துட்டு சிலர் மேஜை, நாற்காலிகள் வாங்கிக் கொடுத்தாங்க. வாகராயம்பாளையம் ரோட்டரி சங்கம், இலவசமாகக் குளிர்சாதன சவப்பெட்டி வாங்கிக் கொடுத்தாங்க. தேவைப்படறவங்களுக்கு அதுவும் கொடுக்கறோம். இப்பவெல்லாம் தினமும் 2-க்குக் குறையாம நீத்தார் சேவை வழங்கறோம். சில நாட்கள்ல 7 அழைப்புகள்கூட வருது. ஆனா, எல்லோருக்கும் கொடுக்கற அளவுக்கு எங்ககிட்ட பொருட்கள் இல்லை. இதைப் பெறத் தீவிரமாக முயற்சி செய்யறோம்.

"இறந்த வீட்டுக்குப் போகும்போது, பெண்கள், குழந்தைகள்னு குடும்பமா நாங்க போறதால, அங்க இருக்கறவங்க எங்களை முதல்ல வித்தியாசமாகப் பாத்தாங்க. இப்ப எங்களோட செயல்பாடுகளைப் பார்த்துட்டு, மனதாரப் பாராட்டறாங்க. நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு லட்சக்கணக்குல செலவு செஞ்சும், அவங்கள காப்பாத்த முடியாமலும், இறந்த துக்கத்திலும் இருக்கும் குடும்பத்தாருக்கு, எங்களோட உதவி பெரிய விஷயமா இருக்கு. எங்கக் கைகளைப்பிடிச்சிக்கிட்டு, எங்க சொந்தக்காரங்க மாதிரி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம உதவறீங்க, ரொம்ப நன்றிங்கனு கண்கலங்க சொல்லறதே, எங்களுக்குக் கிடைக்கற பெரிய விருதாகவும், ஊக்குவிப்பதாகவும் அமையுது. இது போதுங்க எங்களுக்கு” என்றார் சதீஷ் நெகிழ்ச்சியுடன்.

இந்த அறக்கட்டளையின் தலைமை அறங்காவலராக இருப்பவர் சதீஷின் மனைவி‌ சாரதா. 2019-ஆம் ஆண்டில் மட்டும் 263 வீடுகளுக்கு இந்தச் சேவையை இந்த அமைப்பு வழங்கியிருக்கிறது.ஃப்ரீசர் பாக்ஸூக்காக மட்டும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். கிருமித் தொற்றைச் சுத்தப்படுத்துவதற்கான மருந்துகள் வாங்க இந்தத் தொகையைப் பயன்படுத்துகிறார்கள்‌ மற்ற அனைத்துப் பொருட்களும் மூன்று நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். காதணி, வளையல் காப்பு போன்ற நிகழ்வுகளுக்கு பொருட்களைக் குறைந்த வாடகைக்குத் தருகிறார்கள். அதில் கிடைக்கும் தொகையையே இதர செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் துண்டு விழுந்து விடுகிறதாம்! 

இதில் மகேஸ்வரி காலை 6 மணி முதல் மாலை 3 வரை தன் செவிலியர் பணியை செய்துவிட்டு, மாலை முதல் இரவு வரை தாய்மை அறக்கட்டளையின் நீத்தார் சேவைக்காக களப்பணியாற்றுகிறார். இவர் தாய்மை அறக்கட்டளையின் துணைத் தலைவி பொறுப்பில் இருக்கிறார். 

கீதா பெண்களுக்கான தையல் கடை வைத்துள்ளார். "நீத்தார் சேவை" வந்தால், தன்னுடைய தையல் பணியை அப்படியே வைத்துவிட்டு, களப்பணியாற்ற வந்து விடுவார். சேவையில் தன் கவலைகளை மறந்து விடுவதாக அடிக்கடி பெருமிதமாகச் சொல்லி வருகிறார். 

பேபி செல்லம்மா, குடும்பத் தலைவியாக இருந்து "தினமும் சேவை இருக்கிறதா?"என ஆர்வமாய் கைபேசியில் அழைத்துக் கேட்டு களப்பணியில் கலந்துகொள்கிறார். இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, சேவைக்கு வந்து விடுகிறார். 

சுமலதா பகல் முழுவதும் அலுவலகம் ஒன்றில் பணி செய்து சோர்ந்து போய் வீடு திரும்பினாலும், மாலை தாய்மை அறக்கட்டளையின் நீத்தார் சேவை களப்பணியில் எந்தச் சோர்வும் இன்றி சுறு சுறுப்பாய் சேவையாற்றுபவர். இவர்கள் நால்வரும் தாய்மை அறக்கட்டளையின் "இலவச நீத்தார் சேவை"யில் இரண்டு வருட காலமாய்,  270 சேவைகளுக்கும் மேலாக தொய்வின்றி வழங்க முக்கியக் காரணமாக இருந்தவர்கள். 

இறந்த இல்லம் தேடிச் சென்று, எந்த எதிர்பார்ப்புமின்றி, ஆண்களுக்கு நிகராய் நின்று சாமியானா அமைப்பதிலும், மேஜைகள், நாற்காலிகள் சுமப்பதிலும், முக்கியமாய் தயக்கமின்றி ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டு சேர்க்கவும் உதவி செய்து வருகிறார்கள்.இறந்த வீட்டில் இவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்து 'என்ன இது பொம்பளைங்க இந்த வேலையை எப்படிச் செய்வாங்க' என்று ஆச்சரியமாகப் பார்ப்பது உண்டு. சாமியானா பந்தல் போட்டு முடித்ததும், 'இப்படி சேவை செய்த பெண்களை எங்கும் பார்த்ததே இல்லை' என்றும் பாராட்டுவார்கள்.

ஈச்சனேரி பக்கத்தில் ஒரு கல்லூரி மாணவன் விபத்தில் இறந்து போனான். ஒரே மாதத்தில் அந்தப் பையனோட அப்பா மாரடைப்பில் இறந்து போனார். ஒரு மாத இடைவெளியில் அந்த இரண்டு பேருக்குமே நீத்தார் சேவையை இந்த அறக்கட்டளை செய்தபோது, வீட்டில் ஆதரவில்லாமல் தனித்துவிடப்பட்ட அம்மா கண்கலங்கி, 'உதவிக்கு நன்றி' என்றபோது தாய்மை அறக்கட்டளையில் உள்ள அனைவருமே நெகிழ்ந்து தான் போனார்கள்.

இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்ட மதம் மாறி திருமணம் செய்து கொண்டதம்பதிக்குப்

பிறந்த குழந்தை, மர்மக் காய்ச்சலால் இறந்து போனது. இந்த வீட்டுக்கும் தாய்மை அறக்கட்டளை உதவியது... பதினாறாம் நாளுக்குச் சென்றபோது 'நாங்க ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம் என்று இருக்கோம். நீங்க உதவ முடியுமா?' என்று அந்தத் தம்பதியினர் கேட்டனர். 'நிச்சயம் உதவி செய்கிறோம்' என்று சொல்லி வந்தனர் அறக்கட்டளையினர்...

"இப்படி துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் துணை நிற்க வேண்டும்.அதைத் தவிர எங்களுக்கு வேறு நோக்கமில்லை" என்று தாய்மை அறக்கட்டளையில் உள்ள அத்தனைபேரும் ஒருமித்துச் சொன்னபோது, இது போன்ற அமைப்புகள் கோவையில் மட்டுமல்ல தமிழகமெங்கும் துவங்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உங்களுக்கு...?

தாய்மை அறக்கட்டளைக்கு நீங்களும் உதவலாம். எண் இதோ... 9894731460

படங்களாக:1.மகேஸ்வரி 2.கீதா 3.பேபி செல்லம்மா 4.சுமலதா 5. சாரதா, சதீஷ் 6, 7. துக்க வீட்டில் தாய்மை அறக்கட்டளை மூத்த இதழியலாளர் அம்ரா பாண்டியன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...