மகனுடன் தற்கொலைக்கு ஆயத்தமான தம்பதி! போலீஸ் ரூபத்தில் வந்த முருகப்பெருமான்!

திண்டுக்கல் பழனியில் தற்கொலை செய்துகொள்ளவிருந்த தம்பதியினரை துரிதமாக செயல்பட்டு போலீசார் மீட்டனர்.


கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி சுஷ்ராஜ். இவர்களுக்கு 2 வயதில் மவுலி என்ற மகன் உள்ளான். வேலை எதுவும் இல்லாத நிலையில் கடன் அதிகமாகியுள்ளது. இதனால் பழனி முருகனை சந்தித்து தங்கள் குறையை முறையிட மூவரும் குடும்பத்துடன் வந்துள்ளனர். பழனி வந்த அவர்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அப்போது இனியும் நமக்கு எதுவும் நல்லது நடக்காது என்று ஸ்ரீநாத்தும – சுஷ்ராஜூம் விரக்தியில் பேசியுள்ளனர்.

மேலும் கேரளாவில் உள்ள தனது உறவினரை தொடர்புகொண்ட ஸ்ரீநாத் கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் மனைவி மகனுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்த உறவினர் உடனடியாக இணையதளம் மூலமாக பழனி  காவல் நிலைய தொலைபேசி எண்ணை கண்டுபிடித்துள்ளார்.

மேலும் தங்கள் உறவினர்கள் பழனியில் இருப்பதாகவும் அங்கு தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எந்த விடுதியில் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் தங்களுக்கு தெரியாது என்றுள்ளனர். இருந்தாலும் பழனியில் உள்ள அனைத்து விடுதிக்கும் போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீநாத் குறித்து விசாரித்தனர்.

அப்போது ஒரு விடுதியில் அவர் இருப்பது தெரியவந்தது. விரைந்து அங்கு சென்ற போலீசார் தற்கொலை செய்து கொள்ள விஷத்தை தயார் செய்து கொண்டிருந்த ஸ்ரீநாத்தையும் அவரது மனைவி மற்றும் மகனையும் காப்பாற்றினர். மேலும் அவர்களுக்கு புத்திமதி சொல்லி கேரளாவிற்கு அனுப்பினர்.

இது குறித்து பேசிய ஸ்ரீநாத் போலீசார் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் முட்டாள் தனமான முடிவை எடுத்திருப்போமூ என்றும் பழனி முருகன் தான் போலீஸ் ரூபத்தில் வந்து தங்களை காப்பாற்றியதாகவும் கூறி நெகிழ்ந்தார்.