இந்திய அளவில் கரோனா வைரசு தாக்குதல் தொடர்பாக தொலைபேசி காலர் டியூன் வைத்து மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
இருமலுடன் அச்சுறுத்தும் கரோனா காலர்டியூன் - மாற்றவும் தமிழில் தரவும் - கோரிக்கை!
ஆங்கிலத்தில் உள்ள இந்தப் பரப்புரையை தமிழில் வழங்கவேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. மைய பொதுத்துறையின் பி.எஸ்.என்.எல். நிறுவன செல்பேசிகளில் கரோனா வைரசு பாதிக்கப்பட்டவர் இருமுவதைப் போன்ற ஒலியுடன் அந்த விழிப்புணர்வுப் பரப்புரை தொடங்குகிறது.
பிறகு, ”இது தடுக்கப்படக்கூடியதே; ஆனாலும் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் அணுக்கமாக இல்லாமல் ஒரு மீட்டராவது தள்ளி இருக்கவேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும்; கைகழுவாமல் கண்களைத் தேய்க்கக்கூடாது; சளி, இருமல், காய்ச்சல், படிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 011 239 780 46 எனும் தொலைபேசியில் அழைக்கலாம்” என்று அதில் குறிப்பிடப்படுகிறது. மைய அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அரசின் இந்த முயற்சியில் நல்ல பலன் உண்டாகலாம் என்றாலும், ஆங்கிலத்தில் மட்டுமே விளம்பரம் இருப்பதால் குறித்த இலக்கை அடையமுடியாமல் போகவும் வாய்ப்பு உண்டு.
எனவே, இதை அந்தந்த மாநில மொழிகளில் தயாரித்து வழங்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு, ச.ம.க. தலைவர் நடிகர் சரத்குமார் ஆகியோர் கூறியுள்ளனர். ”கரோனா வைரசு தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது.
மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!” என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இருமலுடன் தொடங்கும் அந்த விளம்பரத்தை மாற்றியமைக்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.