இலவச வைஃபை! விடா முயற்சி! கலெக்டரான ரயில்வே கூலி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள ஸ்ரீநாத், அந்த ரயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் அரசு பணியாளர் தேர்வுக்காண பாடங்களை படித்து அரசுப்பணிக்கான போட்டித்தேர்வில் வென்றுள்ளார்.


போட்டித் தேர்வுக்கு தயாராகும் பல மாணவர்கள்  அதிக பணம் செலவிட்டு பல்வேறு வகுப்புகளில் சேர்ந்தும் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ரயில் நிலையத்தில் இலவசமாக கிடைக்கும் வைஃபை வசதியை பயன்படுத்தி மட்டுமே போட்டித் தேர்வில் வென்றுள்ளார்.

கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் பிளஸ் டூ முடித்த பின்னர் மேலும் படிக்க ஆசை இருந்தும்  படிக்க வசதி இல்லாததால் மூணாரிலிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையம் எர்ணாகுளம் ரயில் சந்திப்பு. இங்கு கனரக சாமான்களை சுமந்து செல்லும் கூலித் தொழிலாளியாக தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு அரசு அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அவரால் இதற்கான வகுப்புகளுக்கு சென்று பயில போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர் அதை கைவிட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுவாகவே இருந்தது.

"டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்திலும் இந்த சேவை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சுமக்கும் கூலி தொழிலாளியான ஸ்ரீநாத் என்பவர் இலவச வைஃபை சேவை மூலம் அரசு போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி தொடங்கியுள்ளார்.

அரசுப் பணி தேர்வுக்காக, எர்ணாகுளம் நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை சேவையை ஸ்ரீநாத் தனது செல்போனில் இணைத்து, ஒரு ஹெட்செட் மூலம் பாடங்களை கேட்டு படித்து வந்துள்ளார். இணையதளங்களில் போட்டித்தேர்வுக்கான பாடங்கள் ஆடியோவாக கிடைக்கும் நிலையில், சுமை தூக்கிச்செல்லும் போது கூட பாடங்களை மனதில் உள்வாங்கியுள்ளார். சமீபத்தில், கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், ஸ்ரீநாத் இந்த தேர்வில் வெற்றிபெற்றுளளார்.

 தனது வெற்றி குறித்து ஸ்ரீநாத் கூறுகையில் :மூன்று முறை அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதியுள்ளேன். இந்தமுறைதான்  ரயில் நிலையத்திலுள்ள வை-ஃபை வசதியைப் பயன்படுத்திப் படித்து தேர்வை சந்தித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். மூட்டை தூக்கும்போது, படிப்பு சார்ந்த பதிவுகளை செல்போனில் ஓடவிட்டு, ஹெட்போனை மாட்டிக்கொண்டு உள்வாங்கிக்கொள்வேன்.

என்னுடைய கவனம், அதைக் கேட்பதில்தான் இருக்கும். இந்த முறையில்தான் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். இரவில் ஓய்வாக இருக்கும்போது, படித்ததை நினைவுபடுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார். திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை நிருபித்துள்ள ஸ்ரீநாத்துக்கு இளைஞர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.