என் மகனுக்கு உயிர் பிச்சை கொடுங்க! நிர்பயா தாயாரிடம் கெஞ்சிக் கதறிய குற்றவாளியின் தாய்! ஆனால் அவர் சொன்ன பதில்!

நீதிமன்றத்தில் மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்பயாவின் தாயாரிடம் சென்று தனது சேலையை பிடித்துக் கொண்டு குற்றவாளி முகேஷ் சிங்கின் தாயார் தனது மகனுக்கு உயிர் பிச்சை தருமாறு கெஞ்சிக் கதறினார்.


நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடுமாறு அவரது தாயார் தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை நேரில் பார்க்க நிர்பயாவின் தாயார் நீதிமன்றம் வந்திருந்தார். இதே போல் குற்றவாளிகளின் தாய் உள்ளிட்ட உறவினர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

நீதிபதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குற்றவாளி முகேஷ் சிங்கின் தாயார் திடீரென நிர்பயாவின் தாயாரை நோக்கிச் சென்றார். மேலும் தனது புடவையை விரித்து பிச்சை கேட்பது போல் தனது மகனை ஒரே ஒரு முறை மன்னித்துவிடுமாறு அவர் கதறினார். மேலும் தனது மகனுக்கு உயிர் பிச்சை கொடுக்குமாறும் அவர் கெஞ்சினார்.

இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த நிர்பயாவின் தாயார், தனக்கும் ஒரு மகள் இருந்தார் என்றும், அவளுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும், என்னால் எப்படி அதனை மறக்க முடியும் என்றும் நிர்பயாவின் தாயார் கூறினார். மேலும் தனது மகளுக்கு நீதி கிடைக்க தான் ஏழு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி, குற்றவாளிகள் நான்கு பேரையும் ஜனவரி 22ந் தேதி தூக்கிலிடுவதற்கான மரண ஆணையை பிறப்பித்தார். இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட நிர்பயாவின் தாயார், இந்த உத்தரவு நாட்டில் நீதியை நம்புபவர்களுக்கு மேலும் நம்பிக்கையை அளிக்கும் என்றார்.