மாமா நேருவுக்கு வாழ்த்துக்கள்... ஆனா, சொல்லவேண்டிய பாலு சொல்லவே இல்லையே?

தி.மு.க.வில் அதிரடி மாற்றமாக திருச்சியில் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த நேருவை, தி.மு.க.வின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமனம் செய்திருக்கிறார் ஸ்டாலின்.


இந்த பதவி ஏற்கெனவே டி.ஆர்.பாலுவிடம் இருந்த காரணத்தால், ஆரம்பத்தில் இந்தப் பதவியை ஏற்கத் தயங்கினார் நேரு. ஆனால், பாலுவை சமாதானப்படுத்தி விட்டோம் என்று சொல்லித்தான் கே.என். நேருவை அந்தப் பதவியில் அமர வைத்தார்கள். நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நேருவை தி.மு.க.வின் தலைவர் தொடங்கி பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் பாராட்டித்தள்ளினார்கள்.

ஆனால், அவரை பாராட்ட வேண்டிய டி.ஆர்.பாலு மட்டும் பாராட்டவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவாலயத்தில் இருக்கும் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் அறையின் சாவியைக்கூட கொடுக்கவில்லை. இதனால் நேருவுக்கு கடும் வருத்தம்.

இதையறிந்த துரைமுருகன் உடனடியாக டி.ஆர்.பாலுவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். வந்து வாழ்த்து சொல்லுய்யா என்றதும், ‘உன் பதவியை புடுங்கியிருந்தா தெரியும்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டாராம். இதனால் அறிவாலயமே அப்செட். டி.ஆர்.பாலுவிடம் பேசுதற்காக நேரு போன் போட்டிருக்கிறார். அதையும் பாலு எடுக்கவில்லை.

இந்த நிலையில் டி.ஆர்.பாலுவின் மகனும் எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜாவிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதையடுத்து நேருவை சந்தித்த ராஜா, ‘எங்கள் அன்பு மாமாவுக்கு வாழ்த்துகள்’ என்று கூறி வாழ்த்தினாராம். ஏதோ, மகனாவது பாராட்டுனாரே என்று நேரு திருப்திபட்டுக்கொண்டாராம்.