புறநகர் பயணிகள் ரயில் சேவை எல்லோருக்கும் கிடைக்கட்டும்... கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட்.

தற்போது அரசு பஸ் மற்றும் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக இயங்கி வருகிறது. இந்த சூழலில் புறநகர் பயணிகள் ரயில் சேவையும் முழுமையாக இயங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்.


மெட்ரோ ரயில் சேவையும் அரசு பஸ்ஸும் முழுமையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக 2020 மார்ச் 25ந் தேதியன்று நிறுத்தப்பட்ட புறநகர் பயணிகள் ரயில் சேவை இன்று வரை முழுமையாக இயக்கப்படவில்லை. அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் அத்தியாவசியப் பணிக்கு செல்பவர்கள் மட்டுமே பயணிக்கின்றனர். 

தற்போது கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதித்துள்ளனர். ஆனால் சாதாரண ஏழை, எளிய மக்கள், அத்துக்கூலிகள், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் புறநகர் ரயிலை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அரசுப் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வருமானத்தில் இருபத்தைந்து சதவிகிதம் வரை போக்குவரத்து கட்டணத்திற்காக கூடுதலாக செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு செல்லவேண்டுமானால் புறநகர் ரயிலில் மூன்று மாதத்திற்கான சீசன் டிக்கெட் என்பது 500 ரூபாய் தான். அதே நேரத்தில் அரசுப்பேருந்தில் பயணம் செய்தால் ஒரு மாதத்திற்கான சீசன் டிக்கெட் மட்டுமே 1,000 ரூபாய். தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை புறநகர் ரயிலில் கட்டணம் என்பது 20 ரூபாய். ஆனால், அதே நேரத்தில் அரசுப்பேருந்தில் தாம்பரத்திலிருந்து பிராட்வே செல்வதற்கு 40 ரூபாய் என கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர உழைப்பாளி மக்களின் நலன்களை கருதி புறநகர் ரயில் பயணிகள் சேவையை முழுமையாக இயக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்னக ரயில்வேயை வலியுறுத்துகிறது. புறநகர் பயணிகள் சேவை தொடங்குவற்கு தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.