ரம்மி விளையாட வாங்க..! சூதாட அழைக்கும் ஐஆர்சிடிசி செல்போன் ஆப்! அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!

IRCTC ஆப் டவுன்லோடு செய்து வைத்துள்ளவர்களுக்கு சூதாட வருமாறு செல்போனில் நோடிபிகேசன் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசியின் செல்போன் ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துள்ளனர். இதன் மூலமாகவே தங்கள் செல்லும் இடங்களுக்கு அவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி ஆப்பை ஓபன் செய்தால் வரிசையாக விளம்பரம் வர ஆரம்பித்துள்ளது. அதாவத கூகுள் ஆட்சென்ஸ் நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி இணைந்து இந்த  விளம்பரங்களை வழங்கி வருகிறது.

இந்த விளம்பரங்கள் மூலமாக ஐஆர்சிடிசி கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. இந்த விளம்பரங்களால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் தொந்தரவுகள் இல்லை. மேலும் குறைந்த அளவிலேயே ஐஆர்சிடிசி ஆப்பில் விளம்பரமும் வரும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் எந்த வகையான விளம்பரத்தை காட்டுவது என்பதில் தான் ஐஆர்சிடிசி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மைக்காலமாக ரம்மி விளையாட வருமாறு ஐஆர்சிடிசி ஆப்பை ஓபன் செய்தால் விளம்பரம் வருகிறது. ரம்மி என்பது சூதாட்டம். சூதாடுவது இந்தியாவில் தண்டனைக்கு உரிய குற்றம்.

ஆன்லைன் ரம்மி மூலமாக பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதனால் சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் காதல் தம்பதி ஒன்று தற்கொலை செய்து கொண்டது கூட நினைவிற்கு வரலாம். இந்த அளவிற்கு ஆபத்தான ரம்மி விளையாட வருமாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஆர்சிடிசி ஆப்பில் விளம்பரம் வருவது சரியா?

வருமானம் வருவதற்காக கூகுள் ஆட்சென்ஸ் உடன் ஐஆர்சிடிசி டை அப் வைத்திருப்பது சரிதான். அது நல்லதும் கூட. ஆனால் எந்த மாதிரியான விளம்பரம் ஆப்பில் வர வேண்டும் என்கிற செட்டிங்சை ஏன் ஐஆர்சிடிசி தொழில்நுட்ப குழு தீர்மானிக்க கூடாது?

உடனடியாக அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆட்சென்ஸ் விளம்பரங்களை ஆப்பில் சரி செய்யவில்லை என்றால் விவகாரமான விளம்பரங்கள் கூட ஐஆர்சிடிசி ஆப்பில் வரக்கூடும்.