கோவை மூதாட்டிக்கு வீடு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் இதுவரை உதவி கிடைக்கவில்லை,
நிலம், வீடு தர்றேன்னு சொன்னாங்க..! இப்போ வரைக்கும் ஒன்னும் வரலை..! ஏமாற்றப்பட்ட 1 ரூபாய் இட்லி பாட்டி!
கோவை பூலுவாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 80 வயதாகும் இவர், தள்ளாத வயதிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரூ.1க்கு இட்லி விற்று வருகிறார். விறகு அடுப்பில், குடிசை வீட்டில் இட்லி சுட்டு விற்கும் இவரது சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி, அதனை வீடியோவாக எடுத்து யூ ட்யுப் உள்ளிட்டவற்றில் பகிர, அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது.
இந்த வீடியோவை பார்த்த ஹெச்பி, இண்டேன் மற்றும் பாரத் பெட்ரோலியம் சமையல் எரிவாயு நிறுவனங்கள் தரப்பில், இலவச அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுத்தன. இதேபோல, அவரது தொழிலில் நிதி உதவி செய்வதாக, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா உறுதி அளித்தார்.
இதுதவிர, இட்லி பாட்டியின் வீடியோவை பார்த்த உள்ளூர் பிரமுகர்கள் சிலர், அவருக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித் தரும்படி தொகுதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பரிந்துரை செய்தனர். இதையேற்று, கோவை மாவட்ட ஆட்சியரும் பிரதம மந்திரி நிதி உதவித் திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால், ஆண்டுகள் பல உருண்டோடினாலும், இட்லி பாட்டியின் வாழ்வில்தான் இதுவரை மாற்றம் வரவில்லை. வீடு கட்ட நிலம் தருவதாக உறுதி அளித்த அவரது தொகுதி எம்எல்ஏ.,வின் ஆதரவாளர்கள் யாரும் பாட்டியை எட்டிக்கூட பார்க்கவில்லை. அதேபோல, மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் பதில் இல்லை. இப்படி உறுதிமொழி அளித்தவர்கள் யாருமே தற்போது உதவிக்கு முன்வராத நிலையில், இட்லி பாட்டி வருத்தத்துடன் நாட்களை கழித்து வருகிறார்.
''நாம் கேட்காமலேயே வாக்குறுதி கொடுப்பவர்கள், அதனை சொன்னபடி நிறைவேற்றி தர மறந்துவிடுகிறார்கள் பலரது பேச்சைக் கேட்டு நாம்தான் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பின்னாளில் வருத்தப்படுகிறோம்,'' என பாட்டி வேதனை தெரிவிக்கிறார். மொத்தத்தில், செவனேன்னு வேலையை செய்துகொண்டிருந்த பாட்டியை ஆசை காட்டி நமது 'அரசியல்வியாதிகள்' ஏமாற்றியுள்ளனர் என்பது மட்டும் தெளிவாகிறது.