கிறிஸ்தவர்கள் வாக்குகளை தட்டிப் பறித்த எடப்பாடி பழனிசாமி… அதிர்ச்சியில் எதிர்க் கட்சிகள்.

ஆண்டுதோறும் சகல கட்சிகளும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம்தான். அப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்ட விழாவை நினைத்தார்கள்.


ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவியை 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், அந்த விழாவில் பேசியபோது, அ.தி.மு.க. அரசு என்றென்றும் கொள்கைப்படியே செயல்படும். எப்போதும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவானது என்றும் தெரிவித்துவிட்டார். மேலும் முதல்வர் பேசுகையில், வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத அளவுக்கு கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பலரை மாண்புமிகு அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கச் செய்து அழகு பார்த்தவர். அந்த மரபின் தொடர்ச்சியாக இன்று, அமைச்சர் பென்ஜமின் திகழ்கிறார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்கள். அதன்படி, ஒவ்வொரு நபருக்கும் தலா 20,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இனி, இந்த நிதியுதவி 37,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கின்றேன். 

மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியும்தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்று பேசினார். சிறுபான்மையினர் ஓட்டு ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்குத்தான் என்று நினைத்திருந்த ஸ்டாலினும் மற்ற எதிர்க் கட்சியினரும் முதல்வரின் அறிவிப்பைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள்.