சென்னையில் 16 வயது முதல் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுட்டு வரும் நபர், பைக்குகளின் பூட்டை எப்படி உடைப்பது என யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
புல்லட்! பல்சர்! எந்த காஸ்ட்லி பைக்கா இருந்தாலும் ஒரே நிமிடத்தில் லாக்கை உடைச்சிடுவேன்! அதிர வைத்த புல்லட் பவித்ரன்!
சென்னை துரைப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிக அளவில் மோட்டார் பைக்குகள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவ வந்த போலீசார், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக் மற்றும் விலை உயர்ந்த புல்லட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூரை சேர்ந்த பவித்ரன் தன்னுடைய 16 வயதில் ஒரு பைக் திருடியதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளியில் வந்த அவர் அவருக்கு தேவையான சம்பளம் கிடைக்காமல் போனதால், யூடியூபைப் பார்த்து, பைக்கைத் திருடுவது எப்படி என்று கற்றுக் கொண்டார். சைல்டு லாக் மற்றும் மெயின் லாக்கை உடைப்பது குறித்த வீடியோக்களை முழுமையாக பார்த்து, பின்னர் பைக் திருடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன் பின்னர் மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பவித்ரனின் பைக் திருடும் தொழில் ஓகோவென போனது. பகலில் பைக் நிற்கும் இடத்தை நோட்டமிடும் பவித்ரன் இரவு நேரத்தில் சென்று திருடும் பணியை நேர்த்தியாக செய்து வந்தார். மேலும் திருடப்படும் பைக்குகளுக்கு போலி ஆர்.சி. புத்தகம் தயாரித்து இன்சூரன்ஸ் செய்து கொண்டு இணையதளத்தி விளம்பரம் செய்து விற்றுவிடுவாராம்.
குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் உடனே விற்பனையாகிவிடும். தற்சமயம் 8 பைக்குகளை திருடி 3 பைக்குகளை விற்றுவிட்ட பவித்ரன் மீதமிருந்த 5 பைக்குகளை விற்க முயற்சித்தபோது சிக்கியுள்ளார். வருமானத்தையும் மது, மாது, சூது என செலவு செய்துள்ளார் பவித்ரன்.