ஒரே பைக்கில் 5 பேர் சாகச பயணம்! பிறகு நேர்ந்த விபரீதம் தெரியுமா?

இருசக்கரனத்தில் ஒன்றாகச் சென்ற 5 பேர் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்றைய பரபரப்பான சூழலில் பலரும் நிற்க நேரமின்றி வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக, சாலைப் போக்குவரத்து மிக அபாயகரமான ஒன்றாக உள்ளது. பலரும் பலவிதமான இன்னல்களுக்கு சாலை போக்குவரத்தில் ஆளாக நேரிடுகிறது. மிக கவனமாக, போக்குவரத்தில் ஈடுபட பலருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் சாலையோர சிசிடிவி கேமிராவில் பதிவான விபத்துக்காட்சி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை, பெண்கள், ஆண் உள்ளிட்ட 5 பேர் பைக்கில்  ஒன்றாக பயணிக்கின்றனர். சாலையை கடக்க முயன்ற இந்த பைக் மீது, எதிரே வந்த டெம்போ ஒன்று மோதிவிட்டது.

இந்த விபத்தில், அவர்கள் 5 பேரும் சாலையில் சிதறி விழ, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து  உதவி செய்கின்றனர். படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம், சாலை விதிகளை மதிக்காமல் செல்வோருக்கு ஒரு எச்சரிக்கைப் பாடம் என்று, போலீசாரும், பொதுமக்களும் குறிப்பிடுகின்றனர்.