சென்னையை மிரட்டும் சுக்கு காஃபி கொள்ளையர்கள்! வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்!

சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொள்ளை, செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு என தொடர் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்தவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.


பள்ளிகரணை பரமேஷ்வரன் தெருவில் முனி உசைன் என்பவர் வீட்டில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. அம்பாள் நகர் பகுதியில் அம்சவள்ளி என்பவரிடம் 1.5 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர். ஒட்டியம்பாக்கம் அரசன்கழனியில் பபிதா என்பவர் வீட்டில் 4 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது.  

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தந்த புகாரை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்சன்ட் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ், பெரும்பாக்கத்தை சேர்ந்த சூர்யாவிக்ரம், சீனிவாசன் ஆகியோர் பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். மகபூல் பாட்ஷா என்பவர்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இவர்கள் பள்ளிக்கரணை பகுதியில் சுக்கு காஃபி விற்று வந்தது தெரியவந்துள்ளது.

சுக்கு காஃபி விற்பது போல் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 40 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, லேப்டாப், உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து களவு போன சொத்துக்களை மீட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட், உதவி ஆய்வார்கள் இளங்கனி, கண்ணன் ஆகியோரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.