செல்போனில் மும்முரம்! தண்டவாளத்தை கடந்த பெண் என்ஜினியருக்கு நேர்ந்த பயங்கரம்!

சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பெண் பொறியாளர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.


சென்னை பெருங்களத்தூரில் உள்ள ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் வருவதை அறியாமல் செல்போன் பேசுவதில் அதிக கவனம் செலுத்தி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மித்ரா 25, சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றி வருகிறார். தனது பணி காரணமாக வெளிநாட்டிற்கு சென்று நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக பெருங்களத்தூரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அலுவலகத்திற்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்துள்ளார்.இந்நிலையில் தண்டவாளத்தில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல வேண்டும் என்பதற்காக படியை பயன்படுத்தாமல் தண்டவாளத்தில் கீழே இறங்கி நடந்து சென்றுள்ளார். அவர் கீழே இறங்கிய போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது இந்நிலையில் செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அவரது கவனம் முழுவதும் செல்போனில் இருக்கவே மறுபுறம் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் சென்றுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதில் மித்ரா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை காப்பாற்ற முயன்றனர் இருந்தும் ரயில் மோதியதில் பலத்த அடி ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். மற்றும் தகவல் அறிந்து வந்த தாம்பரம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மற்றும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் ரயில் தண்டவாளத்தை கடக்க படியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் இளைஞர்கள் பலரும் அதை கண்டுகொள்ளாமல் ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலகைகள் மற்றும் விழிப்புணர்வு எச்சரிக்கைகள் செய்திருந்தாலும் அவற்றை மதிக்காமல் செல்வதே இந்த மாதிரியாக விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.