கல்யாண மண்டபத்தில் புது மனைவியுடன் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் வைத்து கைது! அதிர்ச்சி தரும் காரணம்!

திருமண விழாவின்போது பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய புது மாப்பிள்ளையை அவரது மாமியார் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பட்டா கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடுவது இப்போது வழக்கமாகி வருகிறது. காவல்துறையினரும் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றனர். இதேபோல் தற்போது திருமண விழா ஒன்றிலும் கேக் வெட்டுவதற்கு பட்டாக் கத்தியை பயன்படுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது. 

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் மாப்பிள்ளை முன்னாள் பச்சையப்பன் கல்லூரி ரூட்டு தல என்பதால் அவரை மரியாதை செய்யும் விதமாக திருமணத்திற்கு வந்திருந்த இந்நாள் ரூட்டு தலைகள் மற்றும் அவரது நண்பர்கள் மணமகன் மற்றும் மணமகள் கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்டி கொண்டாட செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்தான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்ததும் காவல்துறையினர் முதலில் இரண்டு நபரை கைது செய்துள்ளனர்.பின்னர் கோயம்பேட்டில் தன் மாமியார் வீட்டில் விருந்திற்காக வந்து தங்கியிருந்த புது மாப்பிள்ளையையும் திருவேற்காடு காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இதேபோல் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.