சென்னை: பிறந்து 42 நாளே ஆன சிறுவனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, சென்னை மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
பிறந்து 42 நாட்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை! பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சென்னை டாக்டர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!
மும்பையை சேர்ந்த ஒருவருக்கு, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, ஆர்யன் சயானி எனப் பெயரிடப்பட்ட நிலையில், பிறக்கும்போதே, யூரியா சுழற்சி கோளாறு இருந்ததாக, டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த குழந்தையை சென்னைக்கு கொண்டு சென்று, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி , டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
குழந்தை பிறந்து 42 நாளே ஆன நிலையில், சென்னையில் உள்ள டாக்டர் ரீலா இன்ஸ்டிடியூட் அன்ட் மெடிக்கல் சென்டரில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவனது பெற்றோர் சேர்த்தனர். இதற்காக, சிறப்பு மருத்துவ விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து, மும்பையில் இருந்து, சிறுவனை சென்னைக்குக் கொண்டு வந்தனர். 3 கிலோ எடையுள்ள சிறுவனுக்கு,
அவனது தாய் மாமா, தனது கல்லீரலில் சிறு பகுதியை தானமாகச் செய்ய முன்வந்தார். இதன்பேரில், வெற்றிகரமாக, சிறுவனுக்கு மாற்று கல்லீரல் பொறுத்தப்பட்டது. சீனியர் சர்ஜியன் முகமது ரீலா தலைமையிலான மருத்துவக் குழு இதனை சிறப்பாகச் செய்து சாதித்துள்ளது.
சிறுவனுக்கு இந்த சிகிச்சை செய்யப்படாவிட்டால் மூளை ரீதியான பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எனவும், அதனை முன்கூட்டியே தடுத்துவிட்டதாகவும், முகமது ரீலா தெரிவித்துள்ளார். உலகிலேயே, 42 நாட்களே ஆன சிறுவனுக்கு, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில், சென்னையை சேர்ந்த மருத்துவர்களுக்கு, சர்வதேச அளவில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.